கே.வி.என் புரொடைக்ஷன் தயாரிப்பில் பிரேம்ஸ் இயக்கத்தில் துருவா சர்ஜா, ரீஷ்மா நானையா, ஷில்பா ஷெட்டி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னடப் படம் ‘கே டி’. அர்ஜூன் ஜன்யா இசையமைத்துள்ள இப்படம் விரைவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் நேற்று முன் தினம் 10ஆம் தேதி வெளியானது.
படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அப்போது சஞ்சய் தத்திடம் தமிழ் நடிகர்கள் குறித்தான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ரஜினி கமல் இருவரையும் நான் மிகவும் மதிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் என்னுடைய சீனியர்கள். அவர்களின் படம் பார்த்திருக்கிறேன், நிறைய கற்றுக் கொண்டேன். நான் ரஜினியுடன் நிறைய இந்தி படத்தில் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் பணிவானவர்.
நான் விஜய்யுடனும் நடித்திருக்கிறேன். அவரையும் எனக்கு பிடிக்கும். நான் லோகேஷ் கனகராஜ் மீது கோவத்தில் இருக்கிறேன். லியோ படத்தில் அவர் எனக்கு பெரிய கேரக்டர் தரவில்லை. என்னை வீணடித்துவிட்டார்” என கலகலப்பாக பேசினார். தொடர்ந்து, “அஜித்தையும் எனக்கு பிடிக்கும். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். கமலின் தக் லைஃப் படத்தை பார்த்தேன். ரஜினியின் கூலி படத்துக்கு காத்திருக்கிறேன்” என்றார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் லியோ. லலித் தயாரித்திருந்த இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாகப் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.