Advertisment

“அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் காரி துப்புங்க” - சனம் ஷெட்டி ஆவேசம்

sanam shetty protest issue

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டி தனியார் அமைப்புடன் இணைந்து 7 நாட்கள் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தார் நடிகை சனம் ஷெட்டி. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து தனது கோரிக்கைகளை முன் வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “போராட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம். இதற்கு கண்டிப்பாக நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த பாலியல் சீண்டல்கள் மருத்துவர்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் கடந்து வருகிறார்கள். அதனால் இந்த போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம். தொடர்ந்து இந்த போராட்டம் குறித்த அறிவிப்புகளை தெரிவிக்கிறேன். ஏனென்றால் இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நடக்கக்கூடிய ஒன்று. குடும்பத்தில் இருப்பவர்களைக்கூட பெண்கள்நம்ப முடிவதில்லை. அந்த அளவிற்கு வருத்தமான சூழலில் நாம் இருக்கிறோம். இதைப் பற்றி முதலில் தயக்கமின்றி நாம் பேசி குரல் கொடுக்க வேண்டும். அதனால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் எங்களுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு மாற்றம் தேவைப்படுகிறது அதை நம்மால்தான் கொண்டுவர முடியும். அதனால் எங்களுடன் இணைந்து வரும் சனிக்கிழமை போராட்டத்தில் பங்கேற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.

Advertisment

அதைத்தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கை குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “இது குறித்து முழு விவரம் எனக்கு தெரியாது. நான் விரைவில் அதை பார்க்கிறேன். உண்மையாகவே ஹேமா செய்திருப்பதை நான் பாராட்டுகிறேன். அதே போல் பாலியல் சீண்டல் தமிழ் சினிமா துறையிலும் கண்டிப்பாக நடக்கிறது. இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலேயே இதை நான் சொல்லியுள்ளேன். ஆனால் இது நடந்தபோதே சொல்லிருக்கலாம் எனச் சிலர் சொல்லுவார்கள். நான் அங்கேயே அப்போதே சொல்லியிருக்கிறேன். காலணியால் அடிப்பேன் நாயே என்று சொல்லி நான் மொபைலில் சொல்லி இருக்கிறேன்.

Advertisment

அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினால்தான் படவாய்ப்பு கிடைக்கும் என்ற சூழலை நான் அப்போதே ஆஃப் செய்துள்ளேன். அந்த கொடூரமான சூழலில் இருந்து தப்பித்துள்ளேன். ஆனால் அந்த நிலையில் இருப்பவர்கள் பேசக்கூடாது என்று சொல்லுவதற்கு எந்த விதிமுறையும் கிடையாது. அதனால் எப்போது நடந்தாலும் முன் வந்து பேசுங்கள். இதுதான் அதற்கான நேரம். எல்லாருமே அது போல கிடையாது. இப்போது வரைக்கும் நான் பணியாற்றிய குழுவினர்கள் தங்கமானவர்கள். நான் நடித்த எல்லா படங்களும் உண்மையான படங்கள். இதற்கு மேலேயும் படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். என் திறமைக்கு மதிப்பு கொடுத்து என்னை நடிக்க அழைப்பவர்களின் படத்தில் இருப்பது சந்தோஷமான விஷயம். இதற்கு மேல் நான் நடிக்க ஒப்புக்கொண்டால் அது உண்மையாக என் திறமைக்கு கிடைத்த படமாகத்தான் இருக்கும்.

பெண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் அதிகார திமிரில் இருப்பவர்களால் நடத்தப்படும் நேர்மையற்ற செயல். அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினால்தான் பட வாய்ப்பு வரும் என்றால் காரி துப்பிவிட்டு போங்கள். அந்த மாதிரி படமே உங்களுக்கு வேண்டாம். உங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள். அதை மதித்து வேறு ஒருவர் உங்களுக்கு கண்டிப்பாக பட வாய்ப்பு கொடுப்பார். அதற்காக காத்திருங்கள். இல்லையென்றால் நீங்களே சொந்தமாக படத்தில் நடிக்கலாம். அதைத்தான் நான் யூட்யூபில் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் எனக்கு வாரத்திற்கு இரண்டு, மூன்று அழைப்புகள் அது போன்று வரும்.

மலையாள சினிமா துறையில் நடக்கிறது என சொல்லிவிட்டு என்னால் இருக்க முடியாது. எனக்கும் இது நடக்கத்தான் செய்கிறது. நான் மலையாளத்தில் நடிக்கும்போது எனக்கு நடக்கவில்லை. ஆனால் நடந்ததைச் சொல்லும் நடிகைகளுக்கு நாம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. அது போன்ற செயலில் ஈடுபடுபவர்களைத் துணிந்து முன் வந்து அவர்களை அங்கேயே ஆஃப் பண்ணுங்க. பெண்களிடையே ஒற்றுமை இல்லை. அதனால் நமது உரிமைக்காக நாம் போராடித்தான் ஆகவேண்டும்” என்றார். கொல்கத்தாவில் சமீபத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அண்மையில் மலையாள சினிமா துறையில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை பற்றி நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு பரவியிருக்கிறது என்றும். பல முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

kolkata mollywood sanam shetty
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe