/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/200_25.jpg)
சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் நேற்றைய முன்தினம் (30.03.2023) திரையரங்குகளில் வெளியான படம் 'பத்து தல'. இப்படத்தைக் காண சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் டிக்கெட் எடுத்து பார்க்க சென்ற போது, அவர்களை பார்த்த திரையரங்க ஊழியர் சாலையோரம் பாசிமணி விற்பவர்கள் என்பதை அறிந்து உள்ளே செல்ல விடாமல் மறுத்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பலரும் தீண்டாமை கடைப்பிடித்துள்ளதாகக் கண்டனங்கள் எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகம், “யு/ஏ சான்றிதழுடன் இப்படம் வெளியாவதால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் அவர்களை டிக்கெட் சோதனை ஊழியர்கள் உள்ளே செல்ல மறுத்துள்ளனர்”என விளக்கம் கொடுத்திருந்தனர்.பின்பு அவர்களை அனுமதித்ததாகக் குறிப்பிட்டு அவர்கள் படம் பார்க்கும் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்கள்.
இதையடுத்து இந்த விவகாரம் பெரிதாக மாற கோயம்பேடு காவல்துறையினர்திரையரங்க பணியாளர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பிரியா பவானி ஷங்கர், கமல்ஹாசன், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்ட பலரும் இது கண்டிக்கத்தக்கது என கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், நடிகை சனம் ஷெட்டி இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், "இந்தியாவில் பல இடத்தில் புற்றுநோய் போல் உள்ளது இந்த சாதிய பாகுபாடு. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா என்ற கேள்வி பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. அது ஏன் முடியாது. நம்மால் முடியும். கல்வி மற்றும் இது குறித்த விழிப்புணர்வு இருந்தால் நிச்சயம் முடியும். அந்த திரையரங்கில் உள்ளே நடந்த நிகழ்வை வீடியோ எடுத்த நபருக்கு எனது பாராட்டுகள். அந்த வீடியோவால் தான் நாம் அடிக்கடி சென்று வரும்இடத்திலும் சாதி இருக்கிறது என்று தெரியவந்துள்ளது. மேலும் தெரியாமல் பல இடத்தில் நடந்து வருகிறது. அதனால் நான் தயவு கூர்ந்து சொல்கிறேன், சாதிய ஏற்றத்தாழ்வு எங்கே நடந்தாலும் அதனை உடனடியாக வீடியோ எடுங்கள். சமூக வலைத்தளங்களில் பதிவிடுங்கள். தட்டிக் கேட்பதற்கு நாங்கள் இருக்கிறோம். நாம்தான் கேட்க வேண்டும். கண்டிப்பாக ஒரு நாள் இது மாறும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)