“என் படத்தை திருடி எடுத்துள்ளனர்” - மோகன்லால் படம் மீது இயக்குநர் குற்றச்சாட்டு

sanal kumar sasidharan alleges plagiarism in mohanlal thudarum

மோகன் லால் மற்றும் ஷோபனா நடிப்பில் பெரிதாக எந்த புரொமோஷனும் இல்லாமல் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி வெளியான மலையாள படம் ‘துடரும்’. இருவரும் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியிருக்க ரெஞ்சித் தயாரித்துள்ளார். மோகன்லாலின் 360வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. இதுவரை வெளியான மலையாள திரைப்படங்களில் கேரளாவில் மட்டும் அதிகம் வசூலித்த படமாக இப்படம் இருப்பதாகப் படக்குழு தெரிவித்தது.

படத்தின் வரவேற்பை தொடர்ந்து தமிழில் ‘தொடரும்’ என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. இப்படக்குழுவினரை சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் நேரில் பாராட்டியிருந்தனர். இப்படத்தின் வெற்றியின் தொடர்பாக மோகன்லால் தமிழ்நாட்டில் உள்ள திருமலை முருகன் கோயிலில் தரிசனம் மேற்கொண்டு தங்க வேலை காணிக்கையாக வழங்கினார். படத்தில் இடம்பெற்றிருந்த ‘கொண்டாட்டம்’ என்ற பாடலில் திருமலை முருகன் குறித்த வரிகள் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவனிக்கப்படும் மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன், துடரும் படம் தன்னுடைய படத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “துடாரம் படத்தைப் பார்த்தேன். இது 2020 இல் நான் எழுதிய தீயாட்டம் படத்தின் திரைக்கதையை திருடி உருவாக்கப்பட்டுள்ளது. அப்படத்தின் மையக்கருவை தொடாமல் இருந்திருக்கலாம். ஆனால் மற்றபடி அப்படியே எடுத்துள்ளார்கள். ஒருவேளை தயாரிப்பாளர்களுக்கு அதைப் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது அதை அடையாளம் காண முடியாத வகையில் வேண்டுமென்றே மீண்டும் எழுதியிருக்கலாம்.

sanal kumar sasidharan alleges plagiarism in mohanlal thudarum

ஒரு தடயமும் இல்லாமல் திருடும் திறமையான திருடர்கள் கூட, சில இடத்தில் விழுவார்கள். ஐந்து வருடம் என்பது நீண்ட காலம் தான். அதனால் அவர்கள் கதையை மறந்திருக்கலாம். நான் என் திரைக்கதையை அனைவரும் பார்க்கும் வகையில் விரைவில் வெளியிடப் போகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

director mohanlal mollywood
இதையும் படியுங்கள்
Subscribe