பாண்டிச்சேரி காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான மாடல் அழகி சான் ரேச்சல். சங்கர் பிரியா எனும் சான் ரேச்சல் சிறுவயதில் தன் தந்தையை இழந்தவர். பின்பு தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர். மாடலிங் துறையில் தடைகளை உடைத்து பெயர் பெற்றவர் சான் ரேச்சல். அதிக கருப்பு நிறத்தில் இருக்கும் இவர், நிறவெறியால் பல எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளார். பின்பு அந்த நிறவெறிக்கு எதிராகவே தொடர்ச்சியாக ஓங்கி குரல் கொடுத்து வந்தார். மேலும் பெண்கள் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தீவிரமாக பணியாற்றினார்.
2019 ஆம் ஆண்டு மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு பட்டத்தை வென்றார். பின்னர் 2021 ஆம் ஆண்டு மிஸ் புதுச்சேரி பட்டத்தையும் 2022ஆம் ஆண்டு குயின் ஆப் மெட்ராஸ் பட்டத்தையும் வென்றார். லண்டன், ஜெர்மனி மற்றும் பிரான்சில் சர்வதேச மாடலிங் போட்டிகளிலும் இந்தியா சார்பில் கலந்து கொண்டார். மேலும் பெண்கள் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிரமாக பணியாற்றினார்.
இவர் கடந்த ஆண்டு பாண்டிச்சேரியை சார்ந்த சத்யா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். பின்பு கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக தூக்க மத்திரை மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை உட் கொண்டு விட்டதாக தனது தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்பு அவரை பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு, சிகிச்சை பெற்று வந்த சான் ரேச்சல், அங்கு சிகிச்சை பெற பிடிக்காமல் யாருக்கும் அங்கு தெரிவிக்காமல் வெளியே வந்துள்ளார்.
இதையடுத்து, சான் ரேச்சலின் உடலில் வீக்கம் ஏற்பட்டு உடல்நிலை மோசமாகியுள்ளது. பின்பு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்பு மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து உருளையன்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சான் ரேச்சல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. துணிச்சலாக நிறவெறிக்கு எதிராக பேசி வந்த இவர் தற்கொலை செய்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.