Skip to main content

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'சித்திரைச் செவ்வானம்' 

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

samuthirakani chithirai sevvaanam movie direct released on ott

 

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கும் ‘சித்திரைச் செவ்வானம்’ என்ற படத்தில் சமுத்திரக்கனி நடித்துவருகிறார். இயக்குநர் ஏ.எல். விஜய் கதை எழுதியுள்ள இப்படத்தில் நடிகை ரீமா கலிங்கல், நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, ஏ.எல். அழகப்பன் மற்றும் பி. மங்கையர்கரசி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். அப்பா மகளுக்கிடையே நடக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம், வரும் டிசம்பர் 3ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

 

இப்படம் குறித்து நடிகர் சமுத்திரக்கனி கூறியதாவது, "'சித்திரைச் செவ்வானம்’ ஒரு அழகான திரைப்படம். என் தம்பி ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா திடீரென ஒருநாள் வந்து, என்னிடம் ஒரு கதை சொன்னார். அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு அப்பா, பொண்ணு இருவருக்குமிடையிலான உணர்வுபூர்வமான பந்தம், அவர்களின் வாழ்க்கை பயணம், அதில் நடக்கும் பிரச்சனைகள்தான் கதை. இப்படி மனதை உருக்கும் உணர்வுபூர்வமான கதையை, என் தம்பி சொல்வார் என நான் சுத்தமாக எதிர்பார்க்கவேயில்லை. கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஷூட்டிங் போகலாம் என்றேன். மிக அற்புதமான படமாக உருவாக்கிவிட்டார். இம்மாதிரியான ஒரு மிகச்சிறந்த படத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு சில்வாவுக்கு நன்றி. இது நம் சமூகத்திற்கு அவசியமான திரைப்படம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் திரைப்படமாக இருக்கும்" என்றார். 

 

இப்படம் குறித்து ஸ்டண்ட் மாஸ்டரும் இப்படத்தின் இயக்குநருமான சில்வா கூறுகையில், "இயக்குநர் விஜய் என்னிடம் ஒரு கதை சொன்னார். அட்டகாசமாக இருந்தது. இந்தக் கதையை நீங்கள் இயக்குங்கள் நன்றாக இருக்கும் என்றார். எனக்கும் அந்தக் கதையை இயக்கலாம் என்று தோன்றியது. உடனடியாக அந்தக் கதையை நிறைய மேம்படுத்தி, முழு திரைக்கதையாக மாற்றினோம். பின் சமுத்திரக்கனியிடம் இந்தக் கதையைச் சொன்னேன். சொன்ன மறுநொடியே ‘தம்பி சூப்பரா இருக்கு. எப்ப ஷீட்டிங் போகலாம்?’ என்று கேட்டார். அப்படி உருவானதுதான் ‘சித்திரைச் செவ்வானம்' திரைப்படம். நான் ஃபைட் மாஸ்டர் என்பதால் இது ஆக்சன் படம் என்று நினைத்துவிடாதீர்கள். நெஞ்சை தொடுவது போன்ற உணர்வுபூர்வமான படம்தான் இது. ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான அன்பான உறவுதான் கதை. சமூகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல், அதை அவர்கள் கடப்பதுதான் இப்படத்தின் கதை" எனக் கூறியுள்ளார். 

 

'சித்திரைச் செவ்வானம்' படம் குறித்து இயக்குநரும் இப்படத்திற்கு கதை எழுதியவருமான ஏ.எல். விஜய் கூறுகையில், "இந்த திரைப்படம் எங்கள் அனைவருக்குமே மிகவும் பிடித்தமான படைப்பு. 2014இல் எனக்கு தோன்றிய சிறு ஐடியாவைக் கதையாக எழுதி வைத்திருந்தேன். 2020 பொதுமுடக்க காலத்தில் நானும் சில்வா மாஸ்டரும் பேசிக்கொண்டிருந்தபோது, இந்தக் கதையைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்களே இயக்குங்கள் என்று சொன்னேன். ஒரு ஆக்சன் இயக்குநர் என்றால் ஆக்சனில் மட்டும்தான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று அனைவரும் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் சில்வா மாஸ்டர் மிகவும் எமோஷனலானவர், அவருக்குள் ஒரு மென்மையான பக்கம் இருக்கிறது. மிகவும் எளிய சுபாவம் கொண்டவர், நிறைய பேருக்கு உதவுபவர். அவர் இந்தக் கதையை மிகச் சரியாகக் கையாள்வார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் இந்தப் படத்தை நீங்கள் இயக்குங்கள் என்று சொன்னேன், அவரும் ஒப்புக்கொண்டார். அவருடன் இணைந்து இப்படத்தை செய்தது, எனது கடமையாகத்தான் நினைக்கிறேன். சில்வா மாஸ்டர் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். இப்படம் உருவாவதற்கு சில்வா மாஸ்டர்தான் காரணம். எங்கள் படத்தின் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை வெளியிடும் ஜீ5 நிறுவனத்திற்கு மிகப்பெரும் நன்றி. அவர்களுடன் இணைவது எங்களுக்குப் பெருமிதம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்