
சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது சமுத்திரக்கனி பேசுகையில், “அப்பா கதை என்றாலே கேட்டுவிடுவது. அப்படித்தான் இந்த கதையையும் கேட்டேன். அப்பா மகன் உறவை புரிந்து கொள்ளவே முடியாது. நிறைய அப்பாக்கள் என்னிடம், மகனை பற்றி பேசியிருக்கிறார்கள். பத்து நாள் முன்னாடி கூட சிவகாசியில், ஒரு அப்பா, அவரின் மகனிடம் பேசச் சொன்னார். ஃபோனில் கேம் ஆடிக்கொண்டே இருக்கிறான், தப்பான வழியில் போய்விடுவானோ என பயமாக இருப்பதாக சொன்னார். பையனிடம் பேசினேன். அவனுக்கு ரொபோட்டிக் ரொம்ப பிடிக்கும் என்றும் அதை அவனே தயாரிக்கப் போவதாகவும் சொன்னான்.
அதோடு அதை அப்பாவால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றான். உடனே அவனின் அப்பாவிடம் பத்து நிமிஷம் பேசினேன். இங்கு சரி செய்ய வேண்டியது அப்பாக்களைத் தான். மகன் என்னமோ செய்ய வேண்டும் என நினைக்கிறான். அதை செய்யவிடுங்கள். உங்களுடைய அறிவை அவன் மூளையில் திணிக்காதீர்கள். எல்லோரும் அவரவர் இடத்தில் மிகச் சரியாக இருக்கிறார்கள்” என்றார்.