"இந்தப் படம் மொழி தாண்டி பலரை ஈர்த்திருக்கிறது; அது தான் உண்மையான வெற்றி" - சமுத்திரக்கனி

samuthirakani speech at ayothi 50 day celebration

சசிகுமார் நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அயோத்தி'. பெரிதளவு ப்ரொமோஷன் இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பின் மூலம் பலரது கவனத்தை பெற்றது. விமர்சகர்கள் உள்பட பலராலும் பாராட்டை பெற்றது. இப்படத்தின்50வது நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு பட நிறுவனம் கேடயம் வழங்கி கௌரவித்தது. இவ்விழாவில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுபடக்குழுவினரை வாழ்த்தினர்.

நடிகர் சாந்தனு பேசியதாவது:"இந்த விழாவிற்கு அப்பா சார்பில் வந்துள்ளேன். அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை. அப்பா இந்தப் படம் வந்தபோதே என்னை இந்தப் படத்தை பார் என்று சொன்னார். படம் பற்றி புகழ்ந்து வாழ்த்தினார். நான் சமீபத்தில் தான் பார்த்தேன். அத்தனை அற்புதமான படைப்பு. வெளியாகி மூன்று நாட்களில் வெற்றி விழா கொண்டாடும் காலத்தில் இது உண்மையான வெற்றி. சசிகுமார் அண்ணா உண்மையில் அந்த பாத்திரத்தோடு ஒன்றி விட்டார். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.”என்றார்.

இயக்குநர் மந்திரமூர்த்தி பேசியதாவது:"இந்தப் படம் ரிலீஸான பிறகு எல்லோரும் சொன்னது: இந்தப் படம் சரியான சமயத்தில் சரியான கருத்துடன் வந்திருக்கிறது என்றார்கள். அது என் மூலம் நடந்திருக்கிறது, அவ்வளவு தான். அதற்கு இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி. என் அப்பா, அம்மாவுக்கு நன்றி. வீட்டுக்கு இதுவரை 1 ரூபாய் தந்ததில்லை. ஆனால், என்னிடம் எதுவும் எதிர்பார்க்காமல் ஆதரித்த பெற்றோருக்கு நன்றி. என் குரு பாலாஜி அருள் சார்.அவர் இப்போது உயிரோடில்லை. அவருக்கு நன்றி. சசி சார் ஒத்துக்கொண்டிருக்காவிட்டால் இந்தப் படம் நடந்திருக்காது. தனக்கு காட்சிகள் இல்லை என்றாலும்ஒதுங்கி நின்று நடித்தார். வேறு எந்த நடிகரும் செய்திருக்கமாட்டார்கள். சசி அண்ணாவிற்கு நன்றி" என்றார்.

இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது:"சமீபமாக நானும் சசியும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள முடிவதில்லை. எப்படியும் பார்த்துவிடுவோம்.அப்போது நாங்கள் செய்யும் படங்கள் பற்றி பேசிக்கொள்வோம். அப்போதே இந்தப் படம் பற்றி மிக நம்பிக்கையோடு சொன்னார். ஒரு படம் 10 வருடம் 20 வருடம் கடந்தும் பேசப்படும். இந்தப் படம் திரைத்துறை இருக்கும் வரை பேசப்படும். இந்தப் படம் பற்றி தெலுங்கில் என்னிடம் கேட்டார்கள். இப்படி ஒரு படம் வந்திருக்கிறது. நீங்கள் பாருங்கள். தெலுங்கில் நீங்கள் செய்ய முடியுமா? அது என் தம்பி படம். என் சகோதரர் தான் தயாரிப்பாளர் என பெருமையோடு சொன்னேன்.

இந்தப் படம் மொழி தாண்டி பலரை ஈர்த்திருக்கிறது. அது தான் உண்மையான வெற்றி. இந்தப் படத்தை இந்தியில் அப்படியே வெளியிட வேண்டும். அங்கும் இது ஜெயிக்கும். மந்திரமூர்த்தி முதல் படத்திலேயே தன்னை நிரூபித்துவிட்டான். சசி நிஜ வாழ்க்கையிலேயே எல்லோருக்கும் ஓடி உதவும் மனிதன். யாஷ்பால் சர்மா, ப்ரீத்தி நடிப்பு அற்புதம். இன்னும் இந்தப் படம் ஓடும். அனைவருக்கும் என் வாழ்த்துகள்" என்றார்.

samuthirakani Sasikumar
இதையும் படியுங்கள்
Subscribe