எம்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ். சாம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘யோலோ’. இதில் புதுமுக நாயகன் தேவ், தேவிகா சதீஷ், ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சமுத்திரக்கனி, அமீர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இப்பட இயக்குநர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் சமுத்திரக்கனி பேசியதாவது, “அமீர் அண்ணனுக்கு நன்றி சொல்ல வேண்டும். பருத்திவீரன் படத்தில் தான் நானும் சாமும் சந்தித்தோம். அமீர் அண்ணன் எங்களிடம் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
சாமுக்கும் எனக்கும் இனிமையான பயணம். அண்ணனிடமிருந்து வந்த பிறகு ‘இவனை விட்டு விடக்கூடாது’ என நினைத்து என்னுடன் இணைத்துக் கொண்டேன். அவன் எனக்காக நிறையச் செய்துள்ளான். இந்த மேடை அவனுக்கு ரொம்ப லேட்டாக கிடைத்துள்ளது. அதனால் இந்தப் படத்திற்காக அவனுடன் நிற்க வேண்டும் என நினைத்தேன்.
இந்தப் படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். ஏனெனில் அவ்வளவு உழைப்பைச் செய்திருக்கிறார்கள். படத்தில் உண்மையும், உணர்வும் இருக்கிறது. தேவ் கவலைப்படாதீர்கள், உங்கள் அப்பா அம்மா மாமா ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு. அவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள்” என்றார்.
Follow Us