/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/39_62.jpg)
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சமுத்திரக்கனி விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “கேப்டன்... உங்களோடு பயணப்பட்ட 72 நாட்கள், உங்க மனசுக்கு தான் நெறஞ்சமனசு-ன்னு டைட்டில் வச்சேன். அந்த நாட்கள் உங்களோடு இருந்தது, ஒரு மாபெரும் சக்தியோடு இருந்தது மாதிரி இருந்தது. இன்றைக்கும் பசுமையான நினைவுகளாக என்னுடைய மனசுக்குள் இருக்கு. இன்னைக்கு நீங்க இல்லைன்னு சொல்றாங்க. என் மனசு நம்ப மறுக்குது. என்னுடைய கேப்டன் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறம்பி இருப்பார். எங்களுக்குள்ளே நீங்க இருக்கீங்க கேப்டன். உங்கள் நல்ல எண்ணமும் இந்த சமூகத்தில் மீது நீங்க வைத்திருந்த பார்வையும். எல்லாமே எனக்கு தெரியும். அதை நாங்களும் முன்னெடுக்கிறோம் கேப்டன்” என குறிப்பிட்டுள்ளார்.விஜயகாந்த்தை வைத்து ‘நெறஞ்சமனசு’ என்ற தலைப்பில் சமுத்திரக்கனி ஒரு படம் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)