samuthirakani about vijay political entry

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் எனப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.

அப்போது விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் எப்போதும் விஜய்க்கு ஆதரவு தருவேன். ஒரு படத்துக்கு 200 கோடி சம்பாதிக்கக் கூடிய மனிதன், நடிக்கிறதை நிறுத்துறேன் என சொல்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். தெலுங்கில் பவன் கல்யாணுடன் வேலை பார்த்திருக்கிறேன். அவரும் அரசியல் தளத்தில் தான் இருக்கிறார். அவர் கூட அப்படி சொல்லவில்லை. கையில் மூனுபடம் வச்சிருக்கார். தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களும் அரசியலுக்கு வந்திருக்காங்க. வரேன்னு சொல்லியிருக்காங்க. யாருமே நடிப்பை நிறுத்தவில்லை. விஜய் முழுக்க முழுக்க மக்களுக்காக சேவை செய்கிறேன் என சொல்கிறார். இப்படி சொல்கிற தைரியம் யாருக்குமே வரவில்லை. அந்த தைரியத்திற்கே முதலில் ஒரு சல்யூட். அதன் பிறகு என்ன வேணும்னாலும் குறை சொல்லலாம்.

படம் இல்லாமல்தோத்து போய் அவர் வரவில்லை. அவர் நிறைய சம்பாதிச்சு வச்சிருக்கார். ஏதோ ஒன்னு செய்வோம் என்றுதானே வருகிறார். அவருக்காக 100 தயாரிப்பாளர்கள் கூட காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிஒரு சூழலில் அவர் வந்திருப்பது மிகப் பெரிய விஷயம். அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகள், நல்ல விதமாக அமைய வேண்டும். அதற்கு இந்த பிரபஞ்சம் ஆதரவு தர வேண்டும். எல்லாம் கூடி வந்து அவர் நினைக்கிறதுஇந்த மக்களுக்கு போய் சேரணும். நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான், குறிப்பிட்ட காலம் வரை இந்த சமூகத்திலிருந்து வாங்குங்க. ஒரு காலத்திற்கு பிறகு வாங்கினதை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிகொடுங்க. அதுதான் நீ சமூகத்திற்கு வந்ததற்கான ஒரு சுழற்சி. அதை நோக்கி ஒரு மனிதர் நகர்கிறார் என்பது சந்தோஷம். நல்ல தளத்தில் அவர் இயங்கினால் பின்னால் போவதில் தப்பில்லை. நான் கூட போவேன். அதற்கு தானே நாம் ஆசைப்படுகிறோம்.

Advertisment

எல்லா வகையிலும்தமிழக இளைஞர்கள், மக்கள் அனைவரும் பதட்டமாகத்தானே இருக்காங்க. குழப்பமா, சர்ச்சையோடேஒரு பீதியில் தானே இருக்காங்க. அந்த பீதியை சரி செய்து மக்களை இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய நிலைக்கு யார் வந்தாலும், அவங்க பின்னாடி நிற்பேன்” என்றார். முன்னதாக விஜய் தனது கட்சி பெயர் அறிவித்தபோது, சமுத்திரக்கனி அவரது எக்ஸ் பக்கத்தில்,“திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா ” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.