
சமுத்திரக்கனி கடைசியாக விஷாலின் ரத்னம் படத்தில் நடித்திருந்தார். இப்போது ஷங்கர் - கமலின் இந்தியன் 2, ஷங்கர் - ராம் சரணின் கேம் சேஞ்சர் ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் தென்காசியில் உணவக திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு மலையாளப் பட ஷூட்டிங்கிற்காக வந்திருக்கேன். உண்மை சம்பவத்தைத் தழுவிய படம். என்னுடைய படப்பிடிப்பு முடிந்துவிட்டது” என்றார். சூரியின் வளர்ச்சி குறித்த கேள்விக்கு, “என்னுடைய தம்பி சூரி. எதுவுமே இல்லாத கஷ்டப்பட்ட காலத்திலிருந்து அவனை எனக்கு தெரியும். அவனுடைய சொந்த உழைப்பால் இந்த இடத்திற்கு வந்திருக்கான். இன்னும் நிறைய வெற்றிகளை பார்ப்பான். ஏனென்றால் அவன் கடினமான உழைப்பாளி” என்றார்.
படங்களுக்கு தரம் தாழ்ந்த விமர்சனம் வருவது தொடர்பான கேள்விகளுக்கு, “தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மன நோயாளிகள். அவங்களை நாம் எதுவும் செய்ய முடியாது. அவங்களும் இருந்துட்டுத்தான் இருப்பாங்க. நம்ம நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்க வேண்டியது தான். அப்படித் தான் போய்கிட்டு இருக்கோம். ஒரு சில நேரத்தில் கஷ்டமா இருக்கும். அதைக் கடந்து போய்விட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் சினிமா வளர்ந்துக் கொண்டேதான் இருக்கும். நான் வருஷத்துக்கு ஒரு படம் இயக்கி கொண்டுதான் இருக்கேன். வினோதய சித்தம் முடித்துவிட்டு அதைத் தெலுங்கில் இயக்கினேன். போன வருஷம் படம் ரிலீஸானது. இந்த வருஷம் ஜூலையில் ஒரு படம் ஆரம்பிக்கப் போறேன். தியேட்டருக்கு மக்கள் வருவது ரொம்ப குறைந்து விட்டது. கிராமபுரத்தில் யாரும் தியேட்டருக்கு வருவதில்லை. முதல் நாள் முதல் காட்சிக்கு வருபவர்களை பார்த்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனால் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்ஸ் நல்லா ஓடிக்கொண்டு தான் இருக்கு. சினிமா என்பது வேற வேற ரூபத்தில் வந்து கொண்டு இருக்குமே தவிர, அழிந்துவிடாது. சினிமாவை ஒன்னும் பண்ண முடியாது. ரசிகர்கள் இருக்கும் வரை சினிமா இயங்கிக் கொண்டுதான் இருக்கும். வடசென்னை 2 நிச்சயமா வரும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு வருகிறது” என்றார்.