
நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, கடைசியாக தெலுங்கில் பவன் கல்யானை வைத்து 'ப்ரோ' படத்தை இயக்கியிருந்தார். 'வினோதய சித்தம்' படத்தின் ரீமேக்கான இப்படம் கடந்த ஜூலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தமிழில் 'திரு.மாணிக்கம்' என்ற தலைப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படகில் ஹீரோவாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சேலத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சமுத்திரக்கனி கலந்துகொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் இயக்கி நடித்த அப்பா திரைப்படத்துக்கு வரிவிலக்கு பெறுவதற்காக லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு விஷால் அவரின் மார்க் ஆண்டனி படத்துக்கு இந்தியில் வெளியிட மும்பை தணிக்கை குழு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை வைத்தார்.
இது தொடர்பாக சமுத்திரக்கனியிடம் கேள்வியை எழுப்பிய போது, பதிலளித்த சமுத்திரக்கனி, "என்னுடைய அப்பா திரைப்படத்துக்கு வரிவிலக்கு வாங்க காசு கொடுத்தேன். அந்த காலகட்டத்தில் நியாயமாக அப்பா திரைப்படம் அரசு எடுக்க வேண்டியது. அப்படிப்பட்ட சூழலில், நான் கஷ்டப்பட்டு, நான் தயாரித்த ஒரு படத்துக்கு பணம் கொடுத்து தான் வரிவிலக்கு சான்றிதழ் வாங்கினேன். அது ரொம்ப வருத்தமளித்தது" என்றார்.