Skip to main content

"என்னடா இந்தப் படம் வேறமாதிரி வந்துருக்குன்னு கேட்டாங்க..." சமுத்திரக்கனி கலகல பேச்சு!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

Samuthirakani

 

'பூவரசம் பீப்பீ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ஹலீதா ஷமீம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சில்லுக் கருப்பட்டி'. ஆந்தாலஜி வகை திரைப்படமாக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படத்தைத் தொடர்ந்து, ஹலீதா ஷமீம் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் 'ஏலே'. தயாரிப்பாளர் சசிகாந்த் உடனிணைந்து புஷ்கர்-காயத்ரி தயாரித்துள்ள இப்படம், காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் நாயகன் சமுத்திரக்கனியோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் உரையாடினோம். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பின்வருமாறு...

 

"வித்தியாசமான கதாபாத்திரங்கள்தான் என்னை உச்சத்திற்குக் கொண்டு போய் நிறுத்தியுள்ளன. இவர் இப்படித்தான் பண்ணுவார், அவர் அப்படித்தான் பண்ணுவார் என்ற பிம்பம் இங்க இருக்கு. அதை உடைக்கிறவங்கதான் பெரிய கிரியேட்டர்ஸ். அப்படித்தான் ஹலிதா ஷமிமை பார்க்கிறேன். இந்தப் படத்தில் முத்துக்குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்த கதாபாத்திரத்திற்கே நிறைய பரிமாணங்கள் இருக்கும். இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைச்சது பெரிய கிஃப்ட். குழந்தைகளோட நடித்த அனுபவம் நிறைவாக இருந்தது. குழந்தைகளோட நடிக்கிறேன்னா அவர்களை என்கூடவே வச்சுக்குவேன். அப்பா படம் பண்ணும் போதும் அப்படித்தான். என் கூடவே தான் தூங்குவானுக. 'பருத்தி வீரன்' படம் பண்ணும் போதும் அப்படித்தான். அமீர் அண்ணன், நான், குட்டி கார்த்தி கதாபாத்திரத்தில் நடித்த அந்தப் பையன் என மூவரும் ஒரே ரூமில்தான் தூங்குவோம். திடீரென நைட் இரண்டு மணிக்கு எந்திச்சு எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்னு கேட்பான். எந்திச்சு நான் போய் வாங்கிக்கொடுப்பேன். குழந்தைகளைக் கையாளுவது என்பது எனக்கு எளிமையானது.

 

kalathil santhipom

 

கிராமத்து மக்களோட சேர்ந்துதான் நடிச்சிருக்கோம். முதல் இரண்டு நாள்தான், நான் ஒரு நடிகர் அப்படினு பாத்தாங்க. அதுக்கப்புறம் ரொம்ப இயல்பாகிட்டாங்க. அந்த மண்ணுக்கு நெருக்கமான முகங்கள் வேண்டும் என்றுதான் அந்தப் பகுதி மக்களையே நடிக்க வச்சோம். அது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். ஆனால், அவங்களை சரியாகக் கையாண்டு வேலை வாங்கினால் படம் கூடுதல் ரியலிசம் தன்மையோடு இருக்கும். சேரன், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் எனப் பலரும் அழைச்சு என்னடா இந்தப்படம் வேறமாதிரி வந்துருக்குன்னு சொன்னாங்க. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முற்றிலும் வேறாக இருக்கும். என்னுடைய கதாபாத்திரம் பார்த்து நானே வியந்து போய்ட்டேன். இந்த மாதிரி ஒரு நடிகனாக வேண்டுமென்றுதான் நான் சினிமாவுக்கே வந்தேன். இது மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் எளிமையாகக் கிராமப்புற மக்களிடம் சென்றுவிடலாம்".

 

 

சார்ந்த செய்திகள்