
நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்ரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.
அப்போது சமுத்திரக்கனியிடம், சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரொம்ப அரிதாக மரியாதை கிடைப்பது தொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி, “அப்படியெல்லாம் இல்லை. சின்ன படங்கள் எடுத்தவர் பெரிய ஆளாக இருந்திருக்க வேண்டும். அவ்வுளவுதான். படத்தில் சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் கிடையாது. இவுங்க ஒரு அளவு கோல் வச்சிருக்காங்க. சின்ன பட்ஜெட்டில் எடுத்த படங்கள் 300 கோடி கலெக்ட் பண்ண படமெல்லாம் இருக்கு. 200 கோடியில் பண்ண படமெல்லாம் ஓடாமலும் இருக்கு. அப்போ எது சின்ன படம். பெரிய படம். தரம் என்பது படைப்பில் இருக்கக்கூடியது தான். அதை யார் எடுத்து சேர்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். அளவீடுகளும் மதிப்பீடுகளும் வைக்கக் கூடியவங்க இந்த தளத்திலே இல்லாவதர்களாக இருக்காங்க.
நான் நடித்த அடுத்த சாட்டை படம் ரிலீஸாகும் போது பயங்கர மழை. முதல் நாள் முதல் காட்சிக்கு தியேட்டருக்கு வர ரசிகர்கள் தடுமாறுனாங்க. பெரிய படமென்றால் குடை புடிச்சிகிட்டு வருவாங்க. இந்த படத்துக்கு பார்த்துகுவோம் என இருந்துட்டாங்க. வெள்ளி, சனி ஞாயிறு... நான் யார்கிட்ட பணம் வாங்கி படத்தை ரிலீஸ் பண்ணேனோ அவுங்க ஞாயிற்றுக்கிழமை என் ஆபிஸுக்கு வந்து நின்னுட்டாங்க. அவுங்களுக்கு கொடுக்கனும்-னா உழைச்சு சம்பாதிச்சு தான் கொடுக்கனும். அப்படி ஒரு நிலைமை எவனுக்குமே வரக் கூடாது. எனக்கு இறைவன் நடிப்பு என ஒன்னு கொடுத்ததால் தப்பிச்சேன். ஒரு எளிமையான ஒருத்தன் அப்படி மாட்டியிருந்தால் என்னவாயிருப்பான். உண்மையாகவே நம்மை அசிங்கப்படுத்தக்கூடிய முயற்சியில் தான் வந்து நின்னாங்க. எங்க போய் சொல்றது. எனக்கு தெரியும் படம் நல்ல படம், தகுதியான படம். சமூகத்துக்கு தேவையான படம். அந்த முடிவை எடுப்பவர்களுக்கும் படத்துக்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது. அப்படியே குத்தி கொன்னாங்க. அடுத்த வாரம் படம் தியேட்டர்ல இல்ல. ஆனால், கடன் வாங்கி அவுங்களுக்கு நான் காசு கொடுத்தேன். இது மாதிரி அனுபவம் தான் அடுத்து இது போன்ற படைப்பு எடுக்குறதுக்கு தூண்டவே மாட்டேங்குது. மனசே வரமாட்டேங்குது” என்றார்.