Skip to main content

தனுஷுடன் போட்டி போடும் சமந்தா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

samantha Shaakuntalam and dhanush vaathi to release same date

 

சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சாகுந்தலம்'. காளிதாசர் எழுதிய புராணக் கதையான சாகுந்தலையின் காதல் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சமந்தா சாகுந்தலையாகவும் தேவ் மோகன் துஷ்யந்தனாகவும் நடித்துள்ளனர். மேலும், அதிதி பாலன், அனன்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டியில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். 

 

இப்படம் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்த நிலையில், சில காரணங்களால் வெளியாகவில்லை. பின்னர் 3டியில் வெளியாகவுள்ளதால் இன்னும் சில மாதங்கள் ஆகும் என தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில், இப்படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 17 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. 

 

தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சமந்தா, அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்தவுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், நடிப்பிலிருந்து சிறிதுகாலம் விலகியிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதனால் வருத்தத்தில் இருந்த சமந்தா ரசிகர்கள், விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனை மேற்கொண்டு வரும் நிலையில், சமந்தா படம் ரிலீஸாகவுள்ளது அவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. 

 

சாகுந்தலம் வெளியாகவுள்ள அதே தேதியில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' படமும் வெளியாகவுள்ளது. வாத்தி படமும் கடந்த மாதம் வெளியாவதாக அறிவித்து பின்பு பிப்ரவரிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் - அனுபவம் பகிர்ந்த சமந்தா

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Samantha fainted on the movie shooting set

சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகியிருந்தார் சமந்தா. தசை அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அது பூரண குணமடைய தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் 'சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இத்தொடர் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

இதையடுத்து டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். இதையடுத்து மீண்டும் நடிப்பிற்கு திரும்புவதாகத் தெரிவித்திருந்தார். மேலும் உடல்நலம் குறித்த பாட்கேஸ்ட் ஒன்றை வெளியிடுவதாகத் தெரிவித்த அவர், கடந்த மாதம் முதல் அதை தொடங்கி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதில் சமந்தாவும் அவரது நண்பர் ஊட்டச்சத்து நிபுணர் அல்கேஷும் பேசி வரும் நிலையில், சமீபத்தில் கல்லீரல் குறித்து பேசியிருந்தார். அப்போது, “டேண்டலியன் என்கிற ஒருவகை மூலிகைத் தாவரத்தை சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது” என சமந்தா தெரிவித்ததையடுத்து அவர் பேசியது தவறான கருத்து என ஒரு மருத்துவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் சமீபத்திய எபிசோடில், படப்பிடிப்பில் தான் மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளார். “குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் வெப் சீரிஸில் நடிக்க வேண்டி இருந்தது. அதில் ஆக்‌ஷன் அதிகம் என்பதால் உடல் ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு தளத்திலே மயங்கி விழுந்துவிட்டேன். அந்த சமயத்தில் அல்கேஷ் பெருமளவு உதவினார்” என்றார்.

Next Story

“என் அம்மாவின் அன்பு மாதிரி...” - இளையராஜா இசை குறித்து வெற்றிமாறன்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
vetrimaaran speech in ilaiyaraaja biopic event

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்த நிலையில், மேலும் தனுஷ், இளையராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எனக்கு ராஜா சார் இசையை எப்போது கேட்டாலும் ஒன்னுதான் தோணும். அது எங்க அம்மாவுடைய அன்பு மாதிரி. நிலையானது. எப்போதுமே மாறாது. வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்தாலும் அவரின் இசை ஏற்படுத்துகிற உணர்வு எப்போதுமே அப்படியே தான் இருந்துருக்கு. அவருடன் வேலை பார்ப்பது ரொம்ப இலகுவாக இருக்கும். சமமாக நம்மை நடத்துவார்.

அவர் முதல் படம் பண்ணும்போது எனக்கு ஒரு வயசு. ஆனால் என்னோடு அவர் பேசும்போது, படம் பார்த்துவிட்டு பரிந்துரை சொல்லலாமா எனக் கேட்டார். அவர் அப்படி கேட்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆனால் கேட்டார். அப்படிப்பட்ட இடத்தில் தான் ஒரு இயக்குநரை அவர் வைத்து வேலை பார்ப்பார். அவர் இசையமைப்பதை பார்த்தால், இசையமைப்பது ரொம்ப ஈஸி என தோணும். சிரமமே இல்லாமல் வேலை பார்ப்பார். என்னுடைய பார்வையில் அவர் ஒரு மியூசிஷியன் என்பதை விட மெஜிசியன் தான். அவருடைய வாழ்க்கையை படமாக எடுப்பது நம் நாட்டினுடைய பெரிய ஆவணம்.

அவர் இப்போது வேலை பார்த்து வருகிற வாழ்க்கை, இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னால் இருக்கும் 40 வருட வாழ்க்கை, இவ்வளவு காலங்களையும் ஒரு நாட்டினுடைய வரலாற்று பதிவாக அவருடைய இசையில் நாம் சேர்க்க வேண்டும். எல்லாருடைய வாழ்க்கையிலும் தனிப்பட்ட முறையில் அவருடைய இசை இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை படமாக உருவாகும் போது தமிழ் இசை கேட்டு வளர்ந்தவர்கள் அத்தனை பேருடைய படமாக இப்படம் இருக்கும். இந்த படத்தில் ஏதாவது ஒரு விதத்தில் நான் பங்காற்ற வேண்டும் என விருப்பப்படுகிறேன். அருணுக்கு இப்படம் ஒரு கிஃப்ட். தனுஷிற்கு மற்றுமொரு சவால். எந்த சவாலை கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக தனுஷ் தாண்டி வருவார். இந்த படத்தில் ராஜா சாருடைய இசையை கேட்க ஆர்வமாக இருக்கேன்” என்றார்.