
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். பின்பு சில மாதங்கள் கழித்து சற்று உடல்நலம் தேறி பழையபடி மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இப்போது இந்தியில் வருண் தவான் நடிப்பில் உருவாகும் 'சிட்டடேல்' வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். இத்தொடர் வருகிற 28ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதனிடையே சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படம் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிதளவு ஈட்டவில்லை. இப்படி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெறாததால் தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு இப்படம் குறித்தும் சமந்தா குறித்தும் கடுமையாக ஒரு பேட்டியில் விமர்சித்திருந்தார். அவர் கூறுகையில், "சமந்தாவின் கரியர் முடிவுக்கு வந்துவிட்டது. யசோதா பட புரொமோசன்களின் போது கண்கலங்கி படத்தை வெற்றிப்படமாக்க முயற்சித்தார். அதையே இப்போது சாகுந்தலம் படத்திற்கும் செய்கிறார். எல்லா நேரமும் அந்த செண்டிமெண்ட் எடுபடாது. இவை அனைத்தும் மலிவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு பதிலடி தரும் விதமாக அவரை கிண்டல் செய்யும் வகையில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் சமந்தா. அந்த பதிவில், "காது மடலில் எதற்காக ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது என்று கூகுளில் தேடினேன். அதற்கு டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் அதிகம் சுரப்பதால் தான் என கூகுளில் வந்தது." என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் "உங்களுக்கு தெரிந்தால் நான் யாரை சொல்கிறேன் என புரியும்” என்ற தொனியில் ஹேஸ்டேக் ஒன்றை பகிர்ந்திருந்தார். தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு காது பகுதிகளில் அதிகம் முடி இருக்கும் என்பது நினைவுகூரத்தக்கது.