
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது 'சாகுந்தலம்', 'குஷி' மற்றும் 'யசோதா' படத்தில் நடிக்கிறார். இதில் யசோதா படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வருகிற நவம்பர் 11ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில், கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கு டப்பிங் பேசுவது போல் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில் "யசோதா டிரெய்லருக்கு உங்கள் வரவேற்பு அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் (Myositis) எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. குணமடைந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குணமடைய நான் எதிர்பார்த்ததை விட அதிக நாள் எடுத்துக் கொண்டது.
நாம் எப்பொழுதும் வலுவான நிலையில் முன்னிற்க அவசியம் இல்லை என்பதை நான் பொறுமையாக உணர்கிறேன். இந்த நோயில் இருந்து குணமடைய இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனக்கு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தன. இன்னும் ஒரு நாளை என்னால் சமாளிக்க முடியாது என நினைக்கும்போது கூட அந்த நிமிடம் எப்படியோ கடந்து செல்கிறது. என்னுடைய கணிப்பின் படி இன்னும் ஒரு நாளில் குணமடைவதை நெருங்கி விட்டேன் என நினைக்கிறேன். இதுவும் கடந்து போகும்" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சமந்தாவின் ரசிகர்கள் இந்த நோயிலிருந்து பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
pic.twitter.com/z43d9zqCei— Samantha (@Samanthaprabhu2) October 29, 2022