samantha, keerthy suresh to act in vijay 69

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இதையடுத்து கடந்த 14ஆம் தேதி படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’லிரிக் வீடியோ வெளியானது. இதையடுத்து இரண்டாவது பாடல் ஜூன் மாதம் வெளியாகும் என வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். அடுத்த மாதமான ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு பாடல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து இன்னொரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு வெளியானதால், விஜய்யின் அடுத்த படம் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. இப்படம் விஜய்யின் 69ஆவது படமாக உருவாகும் நிலையில் அ.வினோத் இப்படத்தை இயக்குவதாக தகவல் உலா வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் திரிஷா, சமந்தா, மிருனால் தாக்கூர் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆகிய நான்கு நடிகைகளிடம் படக்குழு கதாநாயகி கதபாத்திரம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

Advertisment

samantha, keerthy suresh to act in vijay 69

இந்த நிலையில் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இரண்டு நடிகைகளுமே விஜய்யுடன் நடித்திருக்கின்றனர். கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் சமந்தாவும் பைரவா மற்றும் சர்கார் உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷும் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.