
கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை போன்ற பிரச்சனைகள் உள்ளன. ஆனால், ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு அப்படியில்லாமல், நாம் நினைத்ததைப் படமாக்கி வெளியிட முடியும். இதனாலேயே இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதன் காரணமாக ஓடிடியில் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய படங்களே அதிகளவில் வெளியாகி வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில், நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்-2’ என்ற சர்ச்சைக்குரிய வெப் தொடர் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் சமந்தா தமிழீழப் போராளியாக நடித்துள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், இந்தப் படத்துக்கு பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், இப்படத்தில் நடித்தது குறித்து நடிகை சமந்தா விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
"'தி ஃபேமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிப்பதற்காக என்னிடம் இயக்குநர் கதை சொல்ல வந்தார். அப்போது இலங்கைத் தமிழர்கள் பற்றிய ஆவணப்படங்களைத் திரையிட்டு காண்பித்தனர். அதைப் பார்த்துவிட்டு என் கண்கள் கலங்கிவிட்டன. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்போதே ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிக்க முடிவு செய்துவிட்டேன். அதில் எனக்கு ராஜி என்ற பெண் போராளி வேடம். கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தேன். கதை சம்பவங்கள் முழுவதும் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் நடப்பது போல காட்டியிருந்தார்கள்.
ராஜி, மிக கவனமாக கையாளப்பட வேண்டிய கதாபாத்திரம். நான் அதைப் புரிந்துகொண்டு நடித்தேன். ஈழத் தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் ராஜி கதாபாத்திரத்தின் மூலம் சித்தரித்திருந்தார்கள். இலங்கைத் தமிழர்கள் லட்சக்கணக்கில் வீடு வாசல்களை இழந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அதுபோன்ற காட்சிகளும் உள்ளன. யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. கதையும், காட்சிகளும் கற்பனையாக சொல்லப்பட்டிருந்தன. இலங்கை போரில் மரணம் அடைந்த தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டும். அதை இந்தத் தொடர் நிறைவு செய்யும்" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)