samantha

கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்தார். முதலில் இதை தற்கொலை வழக்காக எடுத்து மும்பை போலீஸார் பதிவு செய்தனர். பின்னர் விசாரணையில், அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் அல்லது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

Advertisment

சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரபோர்த்தி, இவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி உள்ளிட்ட சிலர் போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. மேலும், சுஷாந்த் சிங்குக்கு போதைப் பொருட்களை அவர்கள் வழங்கி வந்ததும் கண்டறியப்பட்டது.

Advertisment

இதுகுறித்து தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், ரியா சக்ரபோர்த்தி, சோவிக் சக்ரபோர்த்தி உட்பட 9 பேரை அண்மையில் கைது செய்தனர். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மும்பை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ரியா சக்ரபோர்த்தி மனு தாக்கல் செய்தார். அதன்பின் நீதிபதி, ரியா சக்கரவர்த்தியை வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சோவிக் உட்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணையின்போது, ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் கொள்முதல் செய்தவர்கள் என சில பாலிவுட் பிரபலங்களின்பெயர்களை கூறி உள்ளார். இதை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருள் தடுப்பு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர் என்று தகவல் வெளியானது. மேலும், அதில் சாரா அலிகான் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகளின் பெயரும் இருப்பதாக தகவல் வெளியானது.

அதனையடுத்து தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் இயக்குனர் மல்ஹோத்ரா அந்த தகவல் பொய்யானது என தெரிவித்தார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் தவறுதலாக சேர்க்கப்பட்ட நடிகர், நடிகையர்களிடம் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா தனது வருத்தத்தை நடிகை ரகுல் ப்ரீத் மற்றும் சாரா அலிகானுக்கு தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் #SorryRakul, #SorrySara என சமந்தா அவர்களுக்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.