samantha about hema commission report

மலையாளத் திரையுலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்வலையை உருவாக்கியது. இந்த சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு கேரள அரசு கமிஷன் அமைத்தது.

இந்த கமிஷன் 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு, மேலும் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து பல நடிகைகள் தங்களுக்கும் பாலியல் தொல்லை நடந்ததாக புகார் தெரிவித்து வருகின்றனர். பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா மலையாள இயக்குநர் ரஞ்சித் மீதும், மலையாள நடிகை ரேவதி சம்பத், நடிகர் சித்திக் மற்றும் ரியாஸ் கான் மீதும் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நடிகை மினுமுனீர் நடிகர் மற்றும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. முகேஷ் மற்றும் மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

இதில் ரஞ்சித், சித்திக், ரியாஸ் கான் மூவரும் நடிகைகளின் குற்றச்சாட்டை மறுத்திருந்தனர். மேலும் ரஞ்சித் மற்றும் நடிகர் சித்திக் இருவரும் இந்த புகார்களைத் தொடர்ந்து அவர்கள் வகித்து வந்த சங்கப் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் இரண்டு பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்பு கேரள அரசின் குழுவில் இருந்து எம்.எல்.ஏ. முகேஷ் நீக்கப்பட்டார். தொடர் பாலியல் புகார்கள் தொடர்பாக மலையாள நடிகர் சங்க அமைப்பான ‘அம்மா’ அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள், தார்மீக பொறுப்பேற்று தலைவர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனிடையே இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக பிரித்விராஜ், டோவினோ தாமஸ், பார்வதி திருவோத்து உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் ஹேமா கமிஷன் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சமந்தா இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பல வருடங்களாக கேரளாவில் உள்ள வுமன் இன் சினிமா கலெக்டிவ் (Women In Cinema Collective) அமைப்பின் செயல்பாடுகளை பின் தொடர்ந்து வருகிறேன். அவர்களது பயணம் எளிதானது அல்ல. இப்போது ஹேமா கமிஷன் அறிக்கை வெளிச்சத்துக்கு வந்திருப்பதற்கு அந்த அமைப்பிற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். குறைந்தபட்சம் மரியாதையான, பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும். அதற்காக பலரும் போராட வேண்டும். இந்த ஹேமா கமிஷன் அறிக்கை மாற்றத்துக்கான தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.