
'ஓர் இரவு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சாம் சி.எஸ்., விக்ரம் வேதா படத்தின் மூலம் பலரது கவனத்தைப் பெற்றார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக் பலரின் பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கைதி, அடங்கமறு, சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி போன்ற படங்களுக்கு இசையமைத்து கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
இந்த நிலையில் இந்தியில் வெளியாகவிருக்கும் 'தி நைட் மேனேஜர்' எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார். இத்தொடர் ஹாலிவுட்டில் 2016 ஆம் ஆண்டு வெளியானது. ஆறு அத்தியாயங்களாக வெளியான இத்தொடர் தற்போது அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.
இதில் 'பொன்னியின் செல்வன்' புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. இத்தொடர் மூலம் இந்தியிலும் பிரபலமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.