
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் மோசடி புகார் கொடுத்தார். கோயம்பேடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் கொடுத்த புகாரில், தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற படத்திற்கு இசையமைக்க சாம் சி.எஸுக்கு ரூ.25 லட்சம் முன்பணம் கொடுத்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்தின் பணிகள் பாதியிலேயே நிற்க தற்போது மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளது. ஆனால் இப்படத்திற்கு இசை அமைக்காமலும் கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் சாம் சி.எஸ் ஏமாற்றி வருகிறார்” என குறிப்பிட்டு இருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சாம் சி.எஸ். தன் மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கடந்த 2020ம் ஆண்டில் தயாரிப்பாளர் சலீம் அலிகான் என்பவர் தான் தயாரிக்க இருக்கும் தமிழ்திரைப்படமான ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ என்ற தலைப்புக் கொண்ட படத்திற்கு இசையமைக்க என்னை ஒப்பந்தம் செய்தார். அதன் பிறகு இத்தனை ஆண்டுகள் தொடர்பில்லாமல் இருந்த சலீம் அலிகான், திடீரென முழுப் படத்தையும் எடுத்து முடித்து விட்டதாக வாய் வார்த்தையாக சொல்லி என்னிடம் இசையமைக்கச் சொல்லி கேட்டார். ஆனால், இதற்கு முன் ஒப்பந்தம் செய்த திரைப்படங்களின் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், காலதாமதம் ஆகும் என்ற நிலவரத்தை அவரிடம் எடுத்துக் கூறினேன். தான் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு சென்ற சலீம் அலிகான் , கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் என் மீது புகார் அளித்திருந்தார். அதற்கான எனது தரப்பு விளக்கங்கள் ஆதாரத்தோடு கொடுக்கப்பட்டது,
இனி காவல் நிலையத்தால் தான் நினைத்தது நடக்காது என்று உணர்ந்த சலீம் அலிகான் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி புகார் அளித்தார். அங்கு கதிரேசன் (செயலாளர்) அவர்கள் முன்னிலையிலும், இசையமைப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டு விட்டு, தயாரிப்பாளரின் நிலைமையை மனதில் கொண்டும், நிர்வாகிகளின் ஆலோசனைப் படியும், ஏற்கனவே மேற்படி திரைப்படம் சம்பந்தப்பட்ட சில பாடல்களுக்கு நான் இசை அமைத்துக் கொடுத்திருந்தாலும், அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், நான் வாங்கிய முன் பணத்தை நானே திருப்பிக் கொடுக்க முடிவு செய்தேன். அதற்கு சலீம் அலிகான் யோசனை செய்து விட்டுச் செல்வதாகக் கூறிச் சென்றார். இந்நிலையில், தற்பொழுது சமீர் அலிகான் கோயம்பேடு காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது ஏதோ மோசடி புகார் அளித்துள்ளார் என்று பல்வேறு ஊடகங்களிலும் இன்று செய்தி வந்திருப்பதை அறிந்து இந்த விளக்கத்தை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்திகளின் அடிப்படையில் பார்க்கிறபோது, மேற்படி சமீர் அலிகான் என்பவர் தானாக அல்லது இன்னும் சிலரின் தூண்டுதலின் பேரில் என்னைப் பற்றி தவறான மற்றும் அவதூறான செய்தியை, காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், தவறான வழியில் என்னிடமிருந்து பணம் பறிக்கும் தீய எண்ணத்துடனும் பரப்பி வருகிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது. ஊடகங்கள் மூலமாக என்னைப் பற்றி அவதூறு பரப்பும் தீய நோக்கம் கொண்டே மேற்படி புகாரை அவர் காவல் நிலையத்தில் கொடுத்திருக்கக் கூடும் என்பதை என்னால் உணர முடிகிறது.
மேற்படி சமீர் அலிகான் என்பவர் எனக்கு எதிராகக் கொடுத்துள்ளதாகச் சொல்லப்படும் புகார் குறி்த்து சம்பத்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து எனக்கு இதுவரை அழைப்பாணை எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்பதையும், அவ்வாறான அழைப்பாணை கிடைக்கப் பெற்றதும், அந்தப் புகாரில் என்னைப் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை முழுவதும் அறிந்துகொண்டு, எனது விளக்கத்தை காவல்துறைக்கும், தேவையான நேரத்தில் ஊடகங்களுக்கும் வழங்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், மேற்படி சமீர் அலிகான் என்பவர் மீது மட்டுமல்லாமல், அவருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்து, அவதூறு செய்திகள் மூலம், என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றுள்ள அனைவர் மீதும், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.