
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகரான சல்மான் கான் தற்போது 'டைகர்' படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்திவரும் சல்மான் கான் தனது 57-வது பிறந்தநாளை கடந்த மாதம் 27 ஆம் தேதி கொண்டாடினார். பிறந்தநாள் விழாவில் ஷாருக்கான், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், ஏராளமான ரசிகர்கள் அவரை நேரில் பார்க்க அவரது வீட்டின் முன்பு கூடி வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சார்ந்த சமீர் என்ற ரசிகர் சல்மான் கானை சந்திக்க கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டருக்கும் மேலாக சைக்கிளில் பயணித்து மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டிற்கு வந்தடைந்துள்ளார். அவரது அதிர்ஷ்டம் சல்மான் கான் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து, அந்த ரசிகர் வந்த தகவல் சல்மான் கான் காதுக்குப் போக, உடனே அந்த ரசிகரைச் சந்தித்துள்ளார். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பொதுவாக எல்லா ரசிகர்களுக்கும் தங்கள் ஃபேவரட் ஹீரோக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவரை எப்படியாவது நேரில் சந்திக்க மாட்டோமா, அவருடன் புகைப்படம் அல்லது ஆட்டோகிராப் வாங்கி விடமாட்டோமா என நினைப்பவர்கள் ஏராளம். அந்த வாய்ப்பு சிலருக்கு கிடைத்துள்ளது. பலருக்கு கிடைப்பதில்லை. இப்போது சல்மான் கான் ரசிகர் சமீருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.