தமிழில் முன்னணி இசைப்பாளரான ஜி.வி பிரகாஷும் பிரபல பாடகி சைந்தவியும் 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் இணைந்து பல்வேறு பாடல்கள் பாடியுள்ளனர். அவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
கடந்த சில மாதங்களாக ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக தகவல் பரவி வந்தது. பின்பு இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இருவரும் வெளியிட்ட செய்தி குறிப்பில், “பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு 11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிய முடிவு செய்துள்ளோம். அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும். இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்தக் கடினமான காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் காதல் ஜோடியின் பிரிவு கோலிவுட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பலரும் பகிர்ந்து வந்தனர்.
இதையடுத்து நேற்று ஜி.வி பிரகாஷ், தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பது ஏற்புடையதல்ல என்றும் தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது ‘யாரோ ஒரு தனிநபரின்’ வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...? என்றும் ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் எனவும் அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜி.வி பிரகாஷை தொடர்ந்து சைந்தவியும் தற்போது விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் சைந்தவி பகிர்ந்திருப்பதாவது, “நாங்கள் பிரைவஸி வேண்டும் எனச் சொன்னப் பிறகும், புனையப்பட்ட கதைகளாக ஏராளமான யூடியூப் வீடியோக்களை பார்க்கும் போது வருத்தமளிக்கிறது. எங்கள் விவாகரத்து எந்தவொரு வெளிப்புற சக்தியினாலும் ஏற்படவில்லை, மேலும் ஒருவரின் குணாதிசயத்தை ஆதாரமற்ற முறையில் படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த முடிவு எங்கள் முன்னேற்றத்திற்காக நாங்கள் இருவரும் பரஸ்பரமாக எடுத்தது. ஜி.வி.பிரகாஷும் நானும் பள்ளிப் பருவத்தில் இருந்தே 24 வருடங்களாக நண்பர்கள், அந்த நட்பை தொடர்ந்து பேணுவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ஜி.வி பிரகாஷ், “தங்கள் சொந்த அனுமானங்களின் அடிப்படையில் கதைகளை எழுதும் சேனல்களின் வீடியோக்களில் உண்மை இல்லை. மேலும் சில ஐடிகள் தங்கள் சொந்த கற்பனை மற்றும் கதைகளின் அடிப்படையில் மக்களை படுகொலை செய்வதை ரசிக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.