Skip to main content

"அதனால்தான் இவர்களை பார்க்கும் போது கோபமாக வருகிறது" - சைஃப் அலிகான் வருத்தம்!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020
yegsg

 

கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். தற்போது இவரது மரணம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. வாரிசு அரசியலால் தான் சுஷாந்த்திற்கு மரணம் ஏற்பட்டதாக பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில் அதே வாரிசு அரசியலால் தானும் பாதிக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி மற்றும் நடிகை ஷர்மிளா தாகூர் தம்பதியின் மகனும், நடிகருமான சைஃப் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசும்போது...

 

"என் ஆரம்பகாலங்களில் நான் பெயர் தெரியாத படங்களில் மூன்றாம் நாயகனாகக் கூட நடித்திருக்கிறேன். ஆனால் நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று எண்ணியதே இல்லை. நானும் வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். நான் சொல்ல வந்தது என்னவென்றால் இது ஒரு வியாபாரம். இங்கு எல்லாம் நடக்கும். இங்கும் அரசியல், அதிகாரம், சூழ்ச்சி எல்லாம் இருக்கும். எல்லோருமே அவரவர் தேவைக்குத்தான் இங்கிருக்கின்றனர். ஒரு அளவுக்கு அதிகாரம் இருந்தால் அவர்களால் விஷயங்களைக் கட்டுப்படுத்த முடியும். எனவே அதை செய்கிறார்கள். எனக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு அடுத்த நாளே யாரோ ஒருவரது செல்வாக்கினால் என் வாய்ப்பு பறிபோயிருக்கிறது. மன்னித்துவிடுங்கள், இதுதான் நிலைமை, எங்கள் கையில் இல்லை என்பார்கள்.

 

முதல் முறை எனக்கு அப்படி நடந்த போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் இரண்டாவது முறை நடந்த போது நானே சிலரை தொலைப்பேசியில் அழைத்து பிரச்சினை செய்தேன். பிறகு அந்த வாய்ப்பு கிடைத்தது. தவறு எங்கு நடந்தாலும் தவறு தான். அதனால்தான் நானும் வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொன்னால் கிண்டல் செய்பவர்களைப் பார்க்கும் போது கோபம் வருகிறது. ஏனென்றால் நானும் கடினமாக உழைத்தே வந்திருக்கிறேன். உனக்கு சலுகை இருந்தது, வாரிசு அரசியல் பிரச்சினை உனக்குத் தெரியாது என்று சிலர் சொல்வார்கள். எனக்கும் மோசமான காலகட்டம் இருந்திருக்கிறது, தனிமையான போராட்டங்கள் இருந்திருக்கிறது. எங்கள் எல்லோருக்குமே அப்படித்தான்" என கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"வெற்றி கொடி நாட்டி பறக்க விடுவோம்" - ராமனாக பிரபாஸ்

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

Adipurush trailer released

 

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

 

3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. இது தொடர்பாக மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு சத்யேந்திர தாஸ், உத்தரப்பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கண்டனம் தெரிவித்திருந்தனர். 

 

இதையடுத்து ‘ஆதிபுருஷ்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் 16 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன் பிறகு படத்தின் புது போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் தொடர்பாக இந்து மத கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை விட ட்ரைலரில் சிஜி காட்சிகள் கொஞ்சம் நன்றாக அமைந்துள்ளது. 

 

இப்படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்தது என்றாலும் ட்ரைலரில் வரும், "அஹங்காரத்தின் நெஞ்சை பிளந்து வெற்றி கொடியை நிலை நாட்டி பறக்க விடுவோம்...", "அகிலத்தில் உள்ள அனைத்தும் உன்னிடம் இருந்தும் நீ அசுரன் தான்" என்கிற சில வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 

 

 


 

Next Story

"எங்க பெட்ரூம் வந்துடுங்களே..." - போட்டோகிராபர்களிடம் கோபப்பட்ட சைஃப் அலிகான்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

Saif Ali Khan paparazzi issue

 

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தில் நடித்து வருகிறார். ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் வருகிற ஜூன் 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

 

இந்த நிலையில், புகைப்படக் கலைஞர்களை சைஃப் அலிகான் கடுமையாக விமர்சித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் தனது மனைவி கரீனா கபூருடன் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவரது வீட்டிற்கு திரும்பினார் சைஃப் அலிகான். அவருக்காக அங்கு காத்திருந்த புகைப்படக் கலைஞர்கள், அவர்கள் வந்ததும் அவர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டே பின்தொடர் முயன்றனர். அதனைப் பார்த்து கோபப்பட்ட சைஃப் அலிகான், "நீங்கள் ஒன்னு செய்யுங்க, எங்க பெட்ரூம் வந்துடுங்களே" எனக் கூறினார். 

 

இது தொடர்பாக சைஃப் அலிகான், "எல்லையை மீறி நடந்து கொள்கிறார்கள். வாசல் வழியாக புகுந்து, காவலாளியை தாண்டி, 20 கேமராக்களையும், லைட்டுகளையும் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுக்கின்றனர். இது சரியானதா... மிகவும் தவறான செயல். நாங்கள் எப்போதும் வெளியில் வரும்போது புகைப்படக் கலைஞர்களுடன் ஒத்துழைக்கிறோம். அவர்களைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், ஒருவரின் வீட்டின் உள்ளே பின்தொடர்வது தவறான செயல்" எனக் கூறியுள்ளார். 

 

சமீபத்தில் ஆலியா பட், தான் வீட்டினுள் இருக்கும் போது யாரோ இரண்டு ஆண்கள் தன்னை அனுமதியின்றி புகைப்படம் எடுத்துள்ளதாக அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.