
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோயினாக வலம் வரும் சாய் பல்லவி, இப்போது தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் கதாநாயகியாகவும், நாக சைதன்யாவின் 23-வது படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து பாலிவுட்டில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே சீதை கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிப்பதாகக் கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது.
அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் சூழலில் மூன்று பாகங்களாக இப்படம் உருவாகுவதாக பேசப்படுகிறது. இத்தகவல் அனைத்தும் உறுதியாகிவிட்டதெனவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

ஹாலிவிட்டில் தி லையன் கிங், தி டார்க் நைட், இன்டெர்ஸ்டெல்லர் உள்ளிட்ட உலகலளவில் கவனம் பெற்ற ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்த ஹன்ஸ் ஜிம்மரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றன. மேலும் ஏ.ஆர் ரஹ்மானிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஹன்ஸ் ஜிம்மர், தி லையன் கிங் மற்றும் டியூன் உள்ளிட்ட படங்களுக்காக இரண்டு முறையும் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.