தென்னிந்தியாவில் சாய் பல்லவிக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. கடைசியாக அவர் தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ‘தண்டேல்’ படத்தில் நடித்திருந்தார். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியக ‘அமரன்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியில் ‘ராமாயணா’ படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு தமிழக அரசு ‘கலைமாமணி’ விருது அறிவித்தது.
சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்டிவாக இல்லாமல் இருக்கும் சாய் பல்லவி, தற்போது தன் தொடர்பான விமர்சனத்திற்கு தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன், சாய் பல்லவியுடன் பீச்சில் இருக்கும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் நீச்சல் உடையில் சாய் பல்லவி தோன்றியிருந்தார். இது விமர்சனத்திற்கு உள்ளானது. சிலர் சினிமாவில் கவர்ச்சி காமிக்காத சாய்பல்லவியா இது என விமர்சித்து வந்தனர். மேலும் இது ஏஐ போட்டோவா எனவும் பதிவிட்டு வந்தனர். அவர்களுக்கு சிலர் பதிலடியும் கொடுத்து வந்தனர். பீச்சில் நீச்சல் உடை அணிந்திருக்கிறார், இதில் என்ன இருக்கிறது எனப் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் சாய் பல்லவி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மீண்டும் தங்கையுடன் டூர் செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் சில இடங்களில் அவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவின் கேப்ஷனில் இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரியலாக எடுக்கப்பட்டது, ஏஐ-யால் உருவாக்கப்பட்டவை அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.