தென்னிந்தியளவில் பிரபலமாகவும் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராகவும் வலம் வரும் தமன், கடைசியாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான ‘ஓஜி’ படத்திற்கு இசையமைத்திருந்தார். சுஜீத் இயக்கியிருந்த இப்படத்தை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருந்தது. இப்படம் 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.308 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது.
இப்படத்தின் புரொமோஷனுக்காக தமன் அமெரிக்கா சென்றிருந்தார். பின்பு முடித்துவிட்டு துபாய் சென்றார். அப்போது அவர் பயணித்த அதே விமானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் பயணித்துள்ளார். இதனை அறிந்த தமன் அவரை சந்தித்து பேசியுள்ளார். அந்த அனுபவத்தை அவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமன் பகிர்ந்த எக்ஸ் பதிவில், “கிரிக்கெட்டின் கடவுள் தி லெஜண்ட் உடன் பயணித்தேன். டல்லாஸிலிருந்து துபாய் வரும் வரை அருமையான நேரம் அமைந்தது. கிரிக்கெட் செலிபிரிட்டி லீக்கில் நான் பேட்டிங் செய்த வீடியோவை அவரிடம் காண்பித்தேன். எனக்கு நல்ல பேட் வேகம் இருப்பதாக மாஸ்டர் கூறினார். விரைவில் அவருடன் வேலை செய்யலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.