ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பேய் கதை’. இப்படத்தில் வினோத்துடன் ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்பபடத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார்.
திகில் நிறைந்த காமெடி த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வரும் 29ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். சபேஷ் மற்றும் முரளி இருவரும் இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் சபேஷிடம் ஸ்ரீ காந்த் தேவாவிற்கு தேசிய விருது வாங்கிவிட்டார், ஆனால் 400 படங்களுக்கு மேல் இசையமைத்த தேவாவிற்கு இன்னும் தேசிய விருது கொடுக்கப்படவில்லையே எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், “விருது கிடைக்காதது கஷ்டமாகத் தான் இருக்கிறது. எவ்வளவோ நல்ல படங்கள் பண்ணியிருக்கிறார். நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார். எல்லாரும் தேவா என்றால் கானா எனச் சொல்வீங்க. அப்படி கிடையாது. ஒரு படத்தில் ஒரு கான பாடல் தான் இருக்கும். மற்ற பாடல்கள் எல்லாம் மெலடியாக இருக்கும். காதல் கோட்டை படத்திற்கு அவருக்கு விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் மிஸ்ஸாகிவிட்டது. பரவாயில்லை, விருது கிடைக்காமல் போனதால் வருத்தம் கிடையாது. அண்ணன் வாங்கவில்லை என்றால் என்ன... அதான் மகன் வாங்கிவிட்டாரே” என்றார்.