Skip to main content

சாமி ஸ்கொயர் பார்க்கப் போறீங்களா? கொஞ்சம் இதை படிச்சிட்டுப் போங்க...

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
saamy

 

சீயான் விக்ரம் ஆறுச்சாமியாக ஊர்வலம் வந்த 'சாமி' கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய வெற்றிப்படம். ஹரி இயக்கியிருந்த இந்தப் படத்தை இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. ஹாரிஸ் ஜெயராஜின் இசை, ப்ரியன் ஒளிப்பதிவு, வி.டி.விஜயன் படத்தொகுப்பு...மூன்றும் சேர்ந்து இந்தப் படத்தை விறுவிறுவென நெருப்பு போல கொண்டு சென்றது. இன்று வெளியாகும் சாமி ஸ்கொயர் (2) இதன் தொடர்ச்சியா, அடுத்த பகுதியா என்பதையெல்லாம் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 90ஸ் கிட்ஸ்களே ஸ்கூல் படித்த பொழுது வந்தது 'சாமி' திரைப்படம். 2000 கிட்ஸ் கே டிவி பார்த்திருந்தால் மட்டுமே 'சாமி' குறித்து தெரிய வாய்ப்புண்டு. அதனால் சாமி ஸ்கொயர் பார்க்கப்போகும் உங்களுக்காக ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.
 

- 'சாமி' வெளிவந்த 2003ஆம் ஆண்டு 'சீயான்' விக்ரம் தன் திரைவாழ்வின் உச்சத்தில் இருந்த ஆண்டு என்றே சொல்லலாம். பொங்கலுக்கு 'தூள்', சித்திரைக்கு 'காதல் சடுகுடு', கோடை விடுமுறை மே 1 அன்று 'சாமி', தீபாவளிக்கு 'பிதாமகன்' என்று அந்த ஆண்டு முழுவதும் சில்வர் ஸ்க்ரீனில் சீயான் ராஜ்ஜியம்தான். இந்தப் படங்களில் 'காதல் சடுகுடு' தவிர மற்ற மூன்றும் பெருவெற்றி பெற்ற திரைப்படங்கள். அஜித், விஜய் இருவரும் சற்றே தொய்வை சந்தித்திருந்த அந்த சமயத்தில் டாப்பில் இருந்தது சீயான்தான்.
 

- இயக்குனர் ஹரி, 'தமிழ்' மூலம் நல்ல பெயரையும் ஓரளவு வெற்றியையும் பெற்ற பின், தன் குருநாதரான இயக்குனர் பாலச்சந்தர் தயாரிப்பில் இயக்கிய படம் 'சாமி'. இன்று ஹரிக்கு இருக்கும் மாஸ் ஹிட் இயக்குனர் என்ற பிம்பத்தின் அடித்தளம் 'சாமி'யிலிருந்து தொடங்கியதே.
 

- திரிஷா... அதற்கு முன்பு 'மௌனம் பேசியதே', 'மனசெல்லாம்' போன்ற படங்களில் நடித்து அளவான ரசிகர்களுக்கு மட்டுமே அறிமுகமாகியிருந்த திரிஷா, சாமி மாமியாக தமிழகமெங்கும் ரீச் ஆனார். 'புவனா' பாத்திரத்தில் அழகு, குறும்பு என அன்றைய இளைஞர்களின் மனதை குறுகுறுக்க வைத்தார். சாமி ஸ்கொயரில் மாமி இல்லாதது ஏமாற்றமே. ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார், எப்படி என்று பார்ப்போம். 

 

saamy

- மின்னலே, மஜுனு, லேசா லேசா... இந்தப் படங்களின் பாடல்களை கொண்டாடிய ரசிகர்களுக்கு, வாட்டர் மிலன் ஜூஸ் குடித்துப் பழகியவர்களுக்கு, 'சாமி' மூலம் கோலிசோடா குடித்த அனுபவத்தைக் கொடுத்தார் ஹாரிஸ் ஜெயராஜ். 'ஆறுமுக சாமிக்கு ஆயுதமாம் வேலு' என்று ஆரம்பிக்கும்போதே 'ஹாரிஸா இது...' என்று எண்ண வைத்தவர் 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா'வில் அனைத்தையும் மறந்து ஆட வைத்தார். 'சாமி'யின்  தீம் மியூசிக் எக்ஸ்ட்ரா கெத்து. '

 

- 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா... இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா' என தமிழகத்தையே பாட வைத்த அந்தப் பாடலை எழுதியவர் பிக்பாஸ் சினேகன். பல நல்ல பாடல்கள் எழுதியவரை 'பிக்பாஸ்' அடைமொழி வைத்து அறிமுகம் செய்வது துரதிர்ஷ்டமே.


 

saamy

 

- போஸ்டர்ல, பேனர்ல எதுலயும் பெயர் இருக்காது, ஆனால் தென்தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களின் அரசியலைக் கட்டுப்படுத்துவது இவர்தான் என்ற பில்ட்-அப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட 'பெருமாள் பிச்சை (எ) இளைய பெருமாள்' பாத்திரம், உண்மையிலேயே வாழும் அண்ணாச்சி ஒருவரின் பிரதிபலிப்புதான் என்று அப்போது பேசினார்கள். அந்தப் பாத்திரத்தில் நடித்த கோட்டா சீனிவாசராவும் குரல் கொடுத்தவரும் அதன் பிறகு பல படங்களில் ரசிகர்களை மிரட்டினர்.    
 

- கலகம் செய்யும் பிராமணராக விவேக் அடித்த லூட்டி தமிழகத்தை சிரிக்க வைத்தது. போலீசிடம் ஏழரை போட்டுக் காண்பித்தது, யானைக்கு பட்டை போடுவது, ஏரியாவிலேயே அரதப் பழசான ஒன்றைக் கொளுத்தி போகி கொண்டாடுவது என ஒரு ஆக்ஷன் படத்தில் தனக்கென ஸ்ட்ராங்காக ஒரு காமெடி பாதையில் ஃபுல் ஸ்பீடில் போனார் விவேக். அதன் பிறகு வந்த எந்த ஹரி படத்திலும் காமெடி 'சாமி' அளவுக்கு வொர்க்-அவுட் ஆகவில்லையென்பதே உண்மை         
 

- லஞ்சம் வாங்கிவிட்டு நல்லது செய்யும் போலீஸ், கலப்புத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் குடும்பங்கள், ஏழு நாள் கௌண்ட்டௌன் வைத்து வில்லனைப் பழிவாங்கும் ஹீரோ, 'நான் போலீஸ் இல்ல பொறுக்கி' என்ற ரீதியிலான பன்ச் வசனங்கள், காது ஆடுவதை வைத்து சாதியை சொல்லும் வில்லன், திரைக்கதையை விட வேகமாக ஓடிய கேமரா என தமிழ் சினிமாவுக்குப் பல சர்ப்ரைஸ்களை கொடுத்தது 'சாமி'
 

-  சரி, கதையையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். லஞ்ச ஊழலால் தான் போலீஸ் ஆக முடியாமல் விவசாயி ஆன ஒரு தந்தை, தன் மகனை போலீஸ் ஆர்வத்துடன் வளர்த்து, அவர் தேர்வில் வெற்றிபெற துணை நிற்கிறார். அங்கும் லஞ்சம் நிற்க, வேறு வழியில்லாமல் செலுத்தி மகன் ஆறுச்சாமியை போலீஸ் ஆக்குகிறார். நேர்மையான போலீசாக இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு ஒத்துழைக்காமையால் லஞ்சப்புகாரில் சிக்கி அநீதியாக சஸ்பெண்ட் செய்யப் படுகிறார். பின், தன்னை நிரூபித்து மீண்டும் திருநெல்வேலியில் டெபுட்டி கமிஷ்னராக, லஞ்சம் வாங்கும் போலீசாக அங்குள்ள பெரிய மனிதர் பெருமாள் பிச்சைக்கு ஓத்துழைப்பவராக பணியில் சேர்கிறார். ஆனால், அநீதி அதிகமாகும்போது இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. ஏழு நாட்களில் அழியப் போவது யாரென்ற சவாலில் இறுதியில் பெருமாள் பிச்சையை வதம் செய்கிறது சாமி. 'சாமியின் வேட்டை தொடரும்' என்னும் செய்தியோடு படம் முடிந்தது 
 

- சாமியின் அடுத்த வேட்டை எப்படியிருக்கும் என்று சாமி ஸ்கொயரில் பார்ப்போம். 'சாமி இல்லை பூதம்' என்கிறார். என்னவென்று பார்ப்போம். 

 

 

 

சார்ந்த செய்திகள்