ஆடை படத்திற்கு பின் அமாலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’.புதுமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை அருண் எழுதியுள்ளார். இந்த படத்தில் அமலா பால் இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதுபோல டீஸரில் காட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனரும் நடிகருமான எஸ்.வி.சேகர், “சினிமாவில் இரண்டு வகை படங்கள். ஒன்னு ஓடும் படம், மற்றொன்று ஓடாத படம் அவ்வளவு தான். சினிமாவில் ராமராஜன் பசுமாடு வைத்து பால் கறக்கும் படம் ஓடிவிட்டால் அதேபோன்ற டெம்ப்ளேட்டில் பத்துப்படம் எடுப்பார்கள். ஏன் என்றால் இது வியாபாரம். நாங்கள் படம் எடுத்த காலத்தில் பத்து லட்சத்திலேயே படத்தை எடுத்து விடுவோம். நாம் சரியான பொருட்செலவில் படம் எடுக்க வேண்டும்.
இப்போது ஒரு நாளைக்குப் படப்பிடிப்பு செலவு நாற்பது லட்சம் வரை ஆகிறது. திருமலை சொன்னார் இந்த வருடம் 300 தயாரிப்பாளர்கள் புதிதாக வரவேண்டிய இடத்தில் வெறும் 50 புது தயாரிப்பாளர்கள் மட்டுமே வந்திருக்கிறார்கள். என்னை கேட்டால் 250 தயாரிப்பாளர்கள் காப்பாற்றபப்ட்டிருக்கிறார்கள் என்று சொல்வேன். அனைத்து தொழிலிலும் அதை பற்றி தெரிந்துகொண்டுதான் உள்ளே நுழைவார்கள். ஆனால், சினிமா மற்றும் அரசியலில்தான் அதை பற்றி தெரிந்துகொள்ளாமல் உள்ளே வந்து கற்றுக் கொள்கிறார்கள். அரசியலிலாவது மற்றவர்கள் காசில் கற்றுக்கொள்வார்கள் ஆனால் சினிமாவில் தன்னுடைய சொந்த காசை போட்டு கற்றுக்கொள்கிறார்கள்.. முதலில் சினிமாவை தெரிந்து கொண்டு உள்ளே வரவேண்டும்.
சமீபத்தில்கூட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்திற்கு அரசாங்கத்தின் ஸ்பெஷல் அதிகாரியை பணி நியமனம் செய்திருக்கிறார்கள். அப்படியென்றால் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்பதால் அரசாங்கம் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கின்றது. நடிகர் சங்கத்தில் ஒரு 30 கோடி, தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு 13 கோடி வரை முற்றிலுமாக வாஷவுட் பண்ணிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். இதனால்தான் சிறப்பு அதிகாரி நியமித்திருக்கிறார்கள். இருந்தாலும் அவருக்கு சினிமாத் துறை குறித்து தெரியாது என்பதால் ஒன்பது பேர் கொண்ட ஒரு குழுவை அவர்களுக்கு அட்வைஸரி போல அமைத்திருக்கிறார்கள்.
ஆனால், நாங்கள் ஒன்பது சேர்ந்தால் எதையும் செய்துவிட முடியும் என்று நினைக்காதிங்க அது தவறு. எங்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. இதுதான் உண்மையான விஷயம். திருவள்ளூவர் கூட இரண்டே அடியில் சொல்லிகொடுப்பார். ஆனால் மனைவி ஒரே அடியில் சொல்லிக்கொடுத்துவிடுவார். தான் தவறு செய்யாமல் அதற்கு மன்னிப்பு கேட்பவன் மனுஷன் என்று சொல்வார்கள். யாரோ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பவன்தான் தாலி கட்டிய புருஷன். அதனால் அடிவாங்குவது குறித்து வருத்தப்படாதீர்கள்.
இந்தப் படத்தில் பெரிய பிளஸ் அமலாபால். அவருக்கு எல்லா மொழிகளிலும் மார்க்கெட் இருக்கு. அமலாபாலின் தையரித்தை நான் பாராட்டுகிறேன்.சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை என்பது என் கருத்து. நம்பிக்கை வேறு, ஓவர் நம்பிக்கை வேறு. சரியான நேரத்தில் படத்தை வெளியிடுங்கள். என் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீர்கள். அதனால், இப்படத்தை அப்படிச் சரியான நேரத்தில் வெளியீட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்” என்று பேசியுள்ளார்.