தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 1940களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்காசியில் உள்ள வனப்பகுதி மற்றும் அங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் அப்படம் குறித்து பேசிய ஜி.வி.பிரகாஷ், "ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற 'செலிபிரேஷன் ஆஃப் லைஃப்' பின்னணி இசைக்குப் பிறகு இந்தப் படத்தில் தான் 3, 4 பின்னணி இசையைப் போட்டு முடித்துள்ளேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒரு அப்டேட்டை வெளியிட்டது படக்குழு. ஆஸ்கர் வென்ற ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' பட பிரபலமானஅமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக் இப்படத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை தயாரிப்புநிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.