யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. நடிகர் பிரபாஸ் கைரேகை நிபுணராகநடித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கரோனா3வது அலை காரணமாக படத்தின் ரிலீஸ் மார்ச் 11 ஆம்தேதிக்கு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'ராதே ஷ்யாம்' படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படம் 400 திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போல ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' ஆகிய இரு திரைப்படங்களையும் சேர்த்து மொத்தம் 3 திரைப்படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடவுள்ளது. இதில் ஆர்.ஆர்.ஆர் படத்தை தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.