Skip to main content

ஆளு ஒல்லி... அடிக்குறதெல்லாம் கில்லி... 'அனி'யின் பணி!

anirudh

 

'மாஸ்டர்' வெளியாகியிருக்கிறது. படம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொன்னாலும், அனைவரும் சொல்லும் கருத்து 'மியூசிக் தெறிக்குது' என்பதுதான். விஜய் வரும் ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி இசை மிக சிறப்பாக 'மாஸ்' கூட்டியிருக்கிறது என்கிறார்கள். பல காட்சிகளை இசை 'எலிவேட்' செய்திருக்கிறது என்றும் கூறுகிறார்கள். இத்தனை பாராட்டும் 'ராக்ஸ்டார்' அனிருத்துக்குதான். 'மாஸ்டர்' மட்டுமல்ல, ரஜினியின் 'தர்பார்', 'பேட்ட', அஜித்தின் 'விவேகம், 'வேதாளம்' என மிகப்பெரிய மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு பக்கா மாஸான இசையமைத்து அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்குபவர் அனிருத்.

 

'மாஸ்' படத்துக்கான இசையென்றதும் கத்தும் இசை, அதிரடி அடி என சத்தம் மட்டும் காட்டாமல் ரசிக்கத்தக்க வகையில் இசையமைப்பவர் அனிருத். நாயகர்களுக்கு அவர் அமைக்கும் தீம் ரசிகர்களை பரவசப்படுத்தும். ஒவ்வொரு படத்திலும் கிட்டத்தட்ட அனைத்து பாடல்களையும் ரசிக்கும் வகையில் அமைத்து, ஒரு பாடலையாவது 'பட்டி தொட்டி' ஹிட் வகையறாவில் சேர்ப்பவர் அனிருத். வெளியாகும் பாடல்களில் ஹிட்டடிக்கும் பாடல்கள் எத்தனை என்று சதவிகிதம் பார்த்தால் தற்கால இசையமைப்பாளர்களில் எளிதாக முதலிடம் பிடிப்பார் அனிருத். தான் ஒரு அஜித் ரசிகர் என்று சில இடங்களில் வெளிப்படுத்திக்கொண்ட அவர் விஜய்க்கு அமைத்த 'கத்தி' தீம் மறக்க முடியாதது. தற்போது 'மாஸ்டரி'லும் அந்த 'மாஸ்' தொடர்கிறது. 'விஜய்க்குதான் பாடல்கள் அமையும் அஜித்திற்கு அரிதுதான்' என்பதை உடைத்து 'ஆளுமா டோலுமா'வை கல்லூரிகளிலும் திருவிழாக்களிலும் ஒலிக்கவைத்தார். இடையில் பெரிதாக கொண்டாடப்படாத பாடல்கள் வந்த நிலையில் 'பேட்ட' படத்தில் ரஜினிக்கேற்ற பாடல்களை அமைத்து ரசிகர்களை கொண்டாட வைத்தார்.

 

rajini ajith vijay

 

தேவா இசையமைத்த ரஜினியின் புகழ்பெற்ற ஓப்பனிங் மியூசிக்கை மெருகேற்றி 'பேட்ட'யில் ஒலிக்கவைத்தார். ரஜினிக்கு மிகவும் பொருத்தமான எஸ்.பி.பியின் குரலில் ஓப்பனிங் சாங் அமைத்தார். இப்படி சற்று பழைய ஸ்டைல் என்று கருதப்படும் விஷயங்களையும் கொஞ்சம் இடைவெளியை எதிர்கொண்ட கலைஞர்களையும் சரியாகப் பயன்படுத்துவது அனிருத்தின் சிறப்பு. இசையமைப்பாளர் தேவாவை தனது 'மான் கராத்தே'வில் பாட வைத்தார். 'ராப்' புகழ் யோகி.பியை நெடுநாளைக்குப் பிறகு 'விவேகம்' படத்தில் சரியாகப் பயன்படுத்தினார். இப்படி மூத்தவர்களை பயன்படுத்தும் அனிருத் புதியவர்களை தேர்வு செய்து வாய்ப்பளிப்பதிலும் குறை வைக்கவில்லை. 'ஹிப்ஹாப் தமிழா'வை தனது ஆரம்ப கட்டத்திலேயே 'வணக்கம் சென்னை' படத்தில் பயன்படுத்தி புகழ் பெறச்செய்தார். 'கத்தி'யில் ஆதி பாடிய பாடல் பெரிய ஹிட். அஜித்தின் படத்துக்கு 'ஆளுமா டோலுமா' ரோகேஷ் முதல் 'மாஸ்டரி'ல் அறிவு வரை புதியவர்களை தயங்காமல் பாடல் எழுத பயன்படுத்திக்கொள்கிறார். அவர்களுக்கும் அனிருத் படங்கள் அடுத்த கட்டமாக அமைகின்றன. அனிருத்தின் இசைக்கு இளைஞர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறதென்றால், அவரது குரலுக்கும் அதற்கு சமமான வரவேற்பு உண்டு. ஏ.ஆர்.ரஹ்மான், இமான் தொடங்கி புதியவர்களான சாம்.சி.எஸ். போன்றவர்கள் வரை பல இசையமைப்பாளர்களின் இசையில் அனிருத் பாடிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன.

 

பீப் சாங், ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானது, கோலமாவு கோகிலா பாடல் யூ-ட்யூபால் நீக்கப்பட்டது... என சர்ச்சைகளும் ஆங்காங்கே இருப்பதுதான் அனிருத்தின் பயணம். அவர் எதற்கும் பதிலளித்ததில்லை. தனது நண்பரும் தான் வழிகாட்டி என்று சொல்லியவருமான தனுஷின் '3' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் கல்லூரி இரண்டாமாண்டு மாணவர் அனிருத். தமிழ் திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிறகு முதல் படத்தில் இத்தகைய அதிர்வை ஏற்படுத்தி, பெரும் வெற்றியை பெற்றது அனிருத் தான். 'வொய் திஸ் கொலவெறி' உலக ஹிட்டானது. அதே நேரம் 'நீ பார்த்த விழிகள்', 'கண்ணழகா..', 'போ நீ போ' பாடல்கள் இளம் காதலர்களின் இதயத்தை வருடின. இப்படி அந்த ஆல்பமே அதகளமாக இருந்தது. ஒரு படத்தோடு ஓய்ந்துவிடாமல் ஒவ்வொரு படத்திலும் வெற்றியை உறுதி செய்கிறார் இந்த ராக்ஸ்டார். 'தர்பார்' போன்று ஒரு சில படங்களில் ’ஓவர் சத்தமாக இருக்கிறது’ என்று விமர்சனங்கள் வந்ததுண்டு. ஆனால், அது குறைவே.

 

dhanush anirudh

 

'அனி' என்று திரையுலகில் அன்பாக அழைக்கப்படும் அனிருத், தனது ஆரம்பகால பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார், ’திரையுலகில் தனக்கு நண்பர் என்றால் அது தனுஷ் மட்டும்தான்’ என்று. ஆனால், இடையில் அவருடன் ஒரு இடைவெளி ஏற்பட்டது. 'VIP' வெற்றிக்கூட்டணி கொஞ்சம் விலகியது. தற்போது மீண்டும் தனுஷ் படத்தில் பணிபுரிய இருப்பதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் இருவரும் சினிமாவுக்கு முன்பே ஒன்றாக சில குறும்படங்களை உருவாக்கியுள்ளனர். அப்போது உருவான பெயர்தான் 'வுண்டர்பார்'. அந்தப் பெயரில்தான் தனுஷ் இப்போது தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார்.

 

'3' படத்திற்கு முன்பு தனது பத்தொன்பது வயதில் ஒரு படத்திற்காக ஒரு வருடம் கடுமையாக உழைத்து இசையமைத்தாராம் அனிருத். ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டதும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அவரை, தனுஷ் சினிமாவுக்குள் அழைத்து வந்தார். அப்போது ஒருவரை மட்டுமே நம்பி வந்த அனிருத்தின் ரசிகர் வட்டமும் திரை நண்பர்கள் வட்டமும் இப்போது மிகப்பெரியது என்பதில் சந்தேகமே இல்லை.