நகைச்சுவை நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞர் ரோபோ சங்கர் கடந்த மாதம் 19ஆம் தேதி, உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. முதலில் மேடை நிகழ்வுகளில் உடலில் வெள்ளை பெயிண்டை அடித்துக் கொண்டு ரோபோ போல் நடித்து காண்பித்து வந்ததால் ரோபோ சங்கர் என பெயர் உருவாகியது. பின்பு சின்னதிரையில் நகைச்சுவை போட்டிகளில் மிமிக்ரி செய்து மக்களை கவர்ந்தார். பின்பு வெள்ளித்திரையிலும் தோன்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். 

Advertisment

இவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கமல், விஜய் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு ஊர்வலமாக வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் மின்மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு செய்து தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கின் போது ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர், சோகத்தில் நடனமாடினார். இது விமர்சனத்திற்கு உள்ளானது. 

Advertisment

இந்த நிலையில் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் ரோபோ சங்கரின் மகள் இந்தரஜா, மனைவி பிரயங்கா மற்றும் மருமகன் கார்த்திக் ஆகியோர் இருந்தனர். அப்போது அவர்களிடம் பிரியங்கா ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் நடனமாடி விமர்சனங்கள் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு தெரிந்து அம்மாவுடைய அன்பு வந்து அவங்களிடைய பேச்சில் இல்லை. இதுபோன்று நடனமாடியதில் தான். ஒரு நடனமாடுபவராகத்தான் அம்மா வாழ்க்கையைத் தொடங்கினார். அப்பாவை அனுப்பி வைக்கும் போது, அந்த நடனம் மூலம் அன்பை வெளிப்படுத்தினார். எங்களுக்கு இன்ஸ்பரைங் தம்பதியினர் எங்க அப்பா அம்மா தான். இரண்டு பேரும் அவ்ளோ அன்யோன்யமாக இருந்தார்கள். அவருடைய நடனத்தை விமர்சிப்பவர்களுக்கு அவ்வளவுதான் புரிதல் இருக்கிறது. அதை பெரிதாக்க வேண்டாம்” என்றார்.