நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு, தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் மேடை நிகழ்வுகளில் உடலில் வெள்ளை பெயிண்டை அடித்துக் கொண்டு ரோபோ போல் நடித்து காண்பித்து வந்ததால் ரோபோ சங்கர் என பெயர் உருவாகியது. பின்பு சின்னதிரையில் நகைச்சுவை போட்டிகளில் மிமிக்ரி செய்து மக்களை கவர்ந்தார். பின்பு வெள்ளித்திரையிலும் தோன்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
ரவி மோகன் - எழில் கூட்டணியில் வெளியான தீபாவளி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், பின்பு முன்னணி நடிகர்களான அஜித்துடன் விஸ்வாசம், தனுஷுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒரு படத்துக்காக உடல் எடையை குறைத்தார். அப்போது அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்ததால் மேலும் அவரது உடல் எடை குறைந்தது. இதனால் உடல் மெலிந்தபடி காணப்பட்ட அவர், பின்பு சிகிச்சை பெற்று பழையபடி மீண்டு வந்தார். தொடர்ந்து படங்களிலும் பிஸியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மறைந்தார். நாளை அவரது பேரனுக்கு காதணி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.
ரோபா சங்கரின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கமல், விஜய் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். ரோபோ சங்கரின் உடல் சென்னையில் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு கமல், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர்களை பார்த்து ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா கதறி அழுதார். இது பார்ப்போரை கலங்கடிக்கச்செய்தது. பின்பு ரோபோ சங்கரின் உடல் ஊர்வலமாக வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் மின்மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.