Skip to main content

“சினிமா சீரழிகிறது” - நடிகர்களுக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்

Published on 22/05/2025 | Edited on 22/05/2025
rk selvamani speech in jinn audio launch

டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜின் -தி பெட்’. இப்படத்தில் ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, 'நிழல்கள்' ரவி,  வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கும் இப்படம் காமெடி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தை டி ஆர் பாலா‍ மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்குகின்றன.

மே 30ஆம் தேதியன்று வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் நீதியரசர் எஸ் கே கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி பன்னீர்செல்வம் ஐபிஎஸ், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, தயாரிப்பாளர் கேயார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி,  இயக்குநர் சங்க தலைவர் ஆர். வி. உதயகுமார் , செயலாளர் பேரரசு , துணைத் தலைவர் ஆர் . அரவிந்தராஜ், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், “வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். இயக்குநரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்களே நேரடியாக கதையை கேளுங்கள். நடிகர்களின் மேலாளர்களும், உதவியாளர்களும் கதை கேட்க தொடங்கியதால் தான் சினிமா சீரழிகிறது. இதனால் திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படுவதில்லை. எப்போது ஒரு நாயகனுக்கும் நாயகிக்கும் இயக்குநருக்கும் இடையே ஒரு புரிதலும், நட்பும் இல்லையோ, அப்போதே அந்தப் படம் தோல்வியை தழுவுகிறது. இதை என் படத்தினை ஆய்வு செய்து தெரிந்து கொண்டிருக்கிறேன். தயாரிப்பாளர் கேயார் ஒரு ஜீனியஸ். அவர் நினைத்தால் தற்போது திரைத்துறையில் நடைபெற்று வரும் பிரச்சனைக்கு தீர்வை சொல்ல முடியும். அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. 

இன்றைய தேதியில் ஒரு நாளைக்கு திரையரங்குகளில் ஏழு முதல் எட்டு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன.‌ இதன் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு அறுபது கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இவை அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர்கள் மூலம் தான் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் இந்த வருமானம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை. படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு மட்டும்தான் நஷ்டம் ஏற்படுகிறது. என்னுடைய தயாரிப்பாளர் நண்பர் ஒருத்தர் 'மத கஜ ராஜா' படம் வெளியாகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன, இன்னும் அதற்கான வசூல் முழுமையாக வந்து சேரவில்லை என குறிப்பிட்டார். இதுதான் தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை.  அதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும். திரையுலகத்தில் தொழிலாளர்கள் தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள்.  தயாரிப்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதில்லை. சில தயாரிப்பாளர்கள் மட்டுமே 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள். எங்களுடைய பெப்சி பொதுக்குழுவில் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்களாகிய நாம் நன்றாக இருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறேன்.‌ தற்போதுள்ள தயாரிப்பாளர்களில் 80 சதவீதத்தினர் தொழிலாளர்களை சிறப்பான மரியாதையுடன் நடத்துகிறார்கள். அதனால் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்களும் பிரார்த்திக்கிறோம். தயாரிப்பாளர் கேயார் ஒரு ஃபார்முலாவை வைத்திருக்கிறார். அதனைப் பயன்படுத்தி தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு அவர் தீர்வு காண வேண்டும். நாங்கள் தவறு செய்திருந்தாலும் அதனை அவர் சுட்டிக் காட்டலாம். நாங்கள் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம்” என்றார். 

சார்ந்த செய்திகள்