விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்த இப்படத்தில் ரூபிணி, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரம்யா கிருஷ்ணன், சரத்குமார் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘ஆட்டமா தேரோட்டமா’ என இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

விஜயகாந்தின் 100வது படமாக வெளியாகியிருந்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பட்டத்தை அடைமொழியாக பெற்றுத்தந்தது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி கடந்த ஏப்ரலுடன் 34 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனையொட்டி இப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் 4கே தரத்தில் உயர்த்தப்பட்டு அடுத்த மாதம் 22ஆம் தேதி விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்துடன் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இந்த படத்திற்காக இந்தியா முழுக்க கிட்டத்தட்ட நாற்பதாயிரம் கிலோ மீட்டர் ட்ராவல் பண்ணியிருந்தோம். ஜூனிய ஆர்டிஸ்டால் கூட எங்களுக்கு பிரச்சனை வந்தது. ஆனால் விஜயகாந்தால் ஒரு முறை கூட பிரச்சனை வந்ததில்லை.

படத்தில் வரும் சண்டை காட்சிகள் எல்லாம் அவரே ஒரிஜினிலாக பண்ணினார். அப்போது நான்கு முறை பெரிய விபத்து ஏற்பட்டது. 60 அடி உயரத்தில் கயிறு கட்டி நடந்து கொண்டிருந்த போது கயிறு அறுந்து விழுந்தார். நலல் வேளை ஒரு புதருக்குள் விழுந்தார். பக்கத்தில் இருக்கும் பாறையில் விழுந்திருந்தால், அன்று கேப்டனையே பார்க்க முடியாமல் போயிருக்கலாம். விழுந்த உடனே எழுந்துவிட்டார். பின்பு என்னிடம் வந்து, உடனே ஒரு ஷாட் எடுக்க சொன்னார். எனக்கு அடிப்பட்டது ஸ்டண்ட் மாஸ்டருக்கு தெரிந்தால் பெரிய ஷாட் எடுக்க பயப்படுவார். அதனால் சீக்கிரம் எனக்கு ஒரு க்ளோஸ் அப் ஷாட்டாவது எடுத்து விடுங்கள் என்றார். ஆனால் அவருக்கு சொல்ல முடியாத வலி இருந்தது. இது மாதிரி நூறு விஷயங்கள் என்னால் சொல்ல முடியும். 

சாலக்குடி நீர் வீழ்ச்சியில் 300 அடி கீழ் பகுதியில் கயிறு கட்டியிருந்தோம். அதில் விஜயகாந்த் சாரே ஏறினார். அன்றைய காலகட்டத்தில் எந்த வசதியுமே இல்லாமல் நிறைய ரிஸ்க் எடுத்து படம் எடுத்தோம். அந்த படத்தை ரீ ரிலிஸ்ஸ் செய்றோம் என சொன்னவுடன் இன்றைக்கு ரிலீஸாகும் படத்திற்கு கூட இல்லாத அளவிற்கு வரவேற்பு இருப்பதாக வினியோகஸ்தர்கள் சொன்னார்கள். ஒரு படத்தை கூவி கூவி விற்கும் காலகட்டத்தில் 30 வருஷம் கழித்தும் இந்த படத்திற்கு டிமாண்ட் இருப்பது அதற்கு விஜயகாந்தின் உழைப்பும் அவரின் ஆசி தான் காரணம்” என்றார்.