Skip to main content

ஆர்.கே. செல்வமணிக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

rk selvamani financier Mukund Chand Bothra case update

 

தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வந்த ஆர்.கே. செல்வமணி தற்போது திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி சங்கத்தில் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். 

 

கடந்த 2016 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆர்.கே. செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் பைனான்சியர் போத்ரா குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சினிமா பைனான்சியர் போத்ரா ஆர்.கே. செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஆர்.கே. செல்வமணி மற்றும் அருள் அன்பரசு இருவரும் விசாரணைக்கு ஆஜராகாததால் இருவருக்கும்  ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்தது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம். இதையடுத்து கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.கே. செல்வமணி ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்டை பிறப்பித்து, வழக்கு விசாரணையை இன்று (22.09.2023) தள்ளி வைத்தது.

 

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதி சுமதி முன்பு ஆர்.கே. செல்வமணி சரணடைந்தார். பின்பு அவரது வழக்கறிஞர் அளித்த மனு, நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு அவருக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. மேலும் வருகிற நவம்பர் 3 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த விஷயத்தில் திராவிட கழகங்களைப் பின்தொடர வேண்டும்” - ஆர்.கே. செல்வமணி

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
rk selvamani about censor issue

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. இப்படத்தின் கதை சில வருடங்களுக்கு முன் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, காங்கிரஸின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் படத்தின் தலைப்பிற்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு படத்தின் காட்சிகளைத் தான் வெளியிடக் கூடாது என்றனர். கேசட்டுகளை வெளியிடலாம் என்று கூறி படத்தின் பாடலை வெளியிட்டார். 

இந்நிகழ்ச்சியில் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “இந்த சென்சார் அராஜகத்திற்கு முதலில் பலியான இயக்குநர் நான் தான். அன்று சற்று காம்ப்ரமைஸ் ஆகி சென்றதால் என் படம் வெளியானது. ஒரு வேளை அன்று விடாப்பிடியாக போராடி இருந்தால் இன்று இவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்களோ என்னவோ? நக்கீரன் சார் சொன்னதைப் போல, நாங்கள் கொஞ்சம் காம்ப்ரமைஸ் ஆகிவிட்டோம். அடுத்து ஒருவர் வந்து எதிர்வினை ஆற்றும்போது தாக்குதல் துவங்கி விடுகிறது. 

இரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். எதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல், அதே நேரம் வளைந்து போகவும் கூடாது. புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் படங்களில் இது கற்பனை என்கின்ற ஒரு கார்டை போட்டு, உண்மை சம்பவங்களில் இருந்து சில விஷயங்களை மாற்றி வீரப்பன் என்பதை வீர்பத்திரன் என்றும் ஆட்டோ சங்கர் என்பதை ஆட்டோ தர்மா என்றும் லேசாக மாற்றி திரைப்படமாக எடுத்தேன். மக்கள் சரியாக நான் எதைப் பற்றி கூறுகிறேன் என்பதை புரிந்துகொண்டு ரசித்தார்கள். அந்தப் படங்கள் தந்த வெற்றியின் உற்சாகத்தில் நான் அடுத்து குற்றப்பத்திரிக்கை என்கின்ற படத்தை எடுத்தேன். அப்பொழுது நான் புரிந்து கொண்ட உண்மை, உண்மையை பேசக்கூடாது என்பதே. நேசமுரளி சொன்னது போல் விளம்பரங்கள் மற்றும் படங்கள் மூலம் பொய் பேசலாம், வன்மம் வளர்க்கலாம். ஆபாசம் பேசலாம். ஆனால் உண்மை பேசக்கூடாது என்பதை அறிந்து கொண்டேன். 

இந்த விஷயத்தில் கலைஞர்கள் திராவிட கழகங்களைத் தான் பின்தொடர வேண்டும் என்று சொல்வேன். கெடுபிடிகள் இருந்தாலும் தங்கள் படங்களின் மூலம் கருத்துகளை பரப்பி ஆட்சிக் கட்டிலுக்கு வந்த திராவிட கழகங்களைத் தான் கலைஞர்கள் பின்பற்ற வேண்டும். அதே நேரம் அதிகாரத்திலிருப்பவர்கள் அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல. கல்லில் தொடர்ச்சியாக மோதிக் கொண்டே இருந்தால் தலை உடையும் என்று தெரிந்தும் தொடர்ச்சியாக முட்டிக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம் இல்லை. உளியினால் அந்தக் கல்லை உடைக்க முயல்வது தான் புத்திசாலித்தனம். ஒரு காலத்தில் மக்களைக் காக்கவே போலீஸும் அதிகாரமும் இருந்தது. ஆனால் தற்போது போலீஸும் அதிகாரமும், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றவே போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். 

துணிச்சலான மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களையே இப்படி மிரட்டுகிறார்கள் என்றால், நேசமுரளி போன்றோரை சுண்டைக்காய் நசுக்குவது போல் நசுக்கிவிடுவார்கள். எனவே இயக்குநர் நேசமுரளி புத்திசாலித்தனமாக இந்தப் பிரச்சினையை அணுகி, தன் படத்தை வெளியிட்டு மேலும் பல படங்கள் எடுத்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார். 

Next Story

“நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்த் பெயரை விவாதிப்பதே அவமானம்” - ஆர்.கே.செல்வமணி

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
rk selvamani speech at vijayakanth memorial meet

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த விஜயகாந்த்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் என நடிகர் சங்க நிர்வாகிகளுடன் நடிகர்கள் கமல், விக்ரம், சரத்குமார், ராதா ரவி, சிவகுமார், ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகில் பல பிரிவுகளில் பணியாற்றும் பலரும் கேப்டன் விஜயகாந்த்தின் மகன்களான விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் மற்றும் அவரது மைத்துனர் சுதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்வில் இயக்குநரும், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “சாதாரண திரைப்பட கல்லூரி மாணவனாக இருந்த என்னை உலகம் முழுக்க அறியச் செய்தவர் கேப்டன் விஜயகாந்த். அவர் நடிகர் சங்கத்திற்கு தலைவரான பிறகு சமுதாயத்தில் நடிகர்களுக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்படுத்தி தந்தவர். ஒரு அமைப்பு என்பது சமூகத்திற்கு பயன்படாவிட்டால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால் தான் விஜயகாந்த் தலைவராக மாறிய பிறகு அவர் தலைமையில் நடைபெற்ற நெய்வேலி போராட்டத்தை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. அப்போதுதான் நடிகர் சங்கம் என்றால் என்ன என்பது இந்தியாவுக்கே தெரிந்தது. புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க வளாகத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் கூட ஒரு விண்ணப்பத்தை வைக்க விரும்புகிறேன். 

ஏனென்றால் நடிகர் சங்கம் இன்று எவ்வளவு மரியாதையாக தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால், அது புகழின் உச்சத்தை தொட்டது என்றால் அது கேப்டனால் மட்டும்தான். அவருடைய பெயரை வைக்கலாமா வேண்டாமா என்று விவாதம் செய்வதையே கூட, அவருக்கு செய்யும் அவமானமாகத்தான் நான் கருதுகிறேன். எந்த விவாதமும் இல்லாமல் அவர் பெயரை வைக்க வேண்டும். முதல்வர் இரண்டு முறை வந்து கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதால் விஜயகாந்த்திற்கு பெருமை இல்லை. தமிழக முதல்வருக்கு தான் பெருமை. பிரதமர் கூட தான் பேசும் மேடைகளில் கேப்டன் விஜயகாந்த் பெயரை சொல்லும் அளவிற்கு ஒரு தாக்கத்தை அவரது மரணம் ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல நடிகர் சங்க வளாகத்திற்கு அவரது பெயரை வைப்பதால் விஜயகாந்த்திற்கு புதிதாக புகழ் எதுவும் கிடைக்கப்போவதில்லை. நடிகர் சங்க வளாகத்திற்கு தான் பெயர் கிடைக்கப் போகிறது. நடிகர் சங்க கடனை எப்படி அடைத்தீர்கள் என அவரிடம் நான் கேட்டபோது, அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா எல்லாம் சரத்குமாரிடம் கேட்டுக்கொள். அவர் தான் எல்லாத்தையும் செட்டில் செய்தார் என்று தனக்கு கிடைத்த புகழை கூட விரும்பாதவர் விஜயகாந்த். மகாத்மா காந்தியைக் கூட பொது இடத்தில் தான் புதைத்தார்கள். ஆனால் தன்னுடைய சொந்த இடத்திலேயே அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும் அளவிற்கு பொதுச்சொத்தை எடுத்துக் கொள்ளாத ஒரு தலைவர் விஜயகாந்த். 

அவரைப் பற்றி ஒரு புத்தகம் ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அவருடைய பிறந்த நாளில் அவர் வாழும் காலத்திலேயே அதை வெளியிட வேண்டும் என நினைத்திருந்தேன். துரதிஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது. அவர் நினைவுடன் இருந்தபோது, கடைசியாக நான், இயக்குநர் விக்ரமன், ஆர்வி உதயகுமார், பேரரசு உள்ளிட்ட ஐந்து பேர் அவரை சந்தித்தோம். அப்போது புலன் விசாரணையில் எப்படி என் கைகளை இறுக்கி பிடித்தாரோ, அதேபோன்று பிடித்துக்கொண்டார். புலன் விசாரணை படத்தின் படப்பிடிப்பை ஒரு பொருட்காட்சியில் நடத்திக் கொண்டிருந்தபோது அதிகப்படியான கூட்டம் கூடி தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, போலீசார் என்னை தவறுதலாக அடித்து விடக்கூடாது என்று என்னுடைய கரங்களை இறுக பற்றிக்கொண்டு அடை காத்தவர் விஜயகாந்த். அதேபோல அவரை கடைசியாக சந்தித்தபோது, ஆர்வி உதயகுமார் அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே என்று பாடியபோது எங்கள் எல்லோர் கண்களிலும் கண்ணீர் வழிய, கேப்டனின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. அதையும் தாண்டி எங்கள் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு அழ வேண்டாம் என எங்கள் கண்ணீரை துடைக்க முற்பட்டார்.

1988 டிசம்பர் 28ஆம் தேதி தான் புலன் விசாரணை படம் பூஜை போட்டு துவங்கப்பட்டது. அவர் மறைந்ததும் அதே போன்று டிசம்பர் 28ஆம் தேதி தான். ஏதோ ஒரு வகையில் எனக்கும் அவருக்கும் ஒரு பிணைப்பு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அவரை கேப்டன் விஜயகாந்த் என எல்லோரும் சொல்லும்போது அதில் பத்து சதவீதம் பங்கு எனக்கும் இருக்கிறது என்று பெருமிதம் கொள்கிறேன். கேப்டனின் மறைவுக்கு யாரும் வரவில்லை என்றால் மக்கள் அவர்களை குற்றம் சாட்டுகின்ற அளவுக்கு மக்களின் மனநிலை இருந்தது. மக்களுக்கு பயந்தாவது நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்கிற கட்டாயத்தை பொதுமக்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அதுதான் கேப்டன் விஜயகாந்தின் பலம். வாழும் வரைக்கும் அவரது பலம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் மறைந்த இன்றும் அவரது நினைவிடத்தில் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றால் இதை விட ஒரு நன்றிக்கடனை தமிழக மக்கள் வேறு யாருக்கும் செலுத்தி இருக்க மாட்டார்கள்” என்றார்.