
ஐகான் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்வில், இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “சிறந்த டெக்னீஷியன்ஸ் தான் சிறந்த படைப்புகளை உருவாக்குகிறார்கள். உருவாக்குவது கடினம். அதை உடைப்பது எளிது. கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அடுத்தவர்களைத் தூண்டி விடுவது எளிது. முரண்பாடுகளை சரிசெய்தால் மட்டுமே வேலைகள் சரியாக நடக்கும். சங்கத்தில் பிரச்சினைகள் வரும்போது அதை சரிசெய்யாமல், அடுத்தடுத்து சங்கங்கள் தொடங்கிக் கொண்டே இருந்தால் கடைசி வரை பிரச்சினைகள் முடியாது. இது ஒரு எச்சரிக்கை மணி. அடுத்து எப்படி வேண்டுமானாலும் திருப்பி விடப்படலாம்” என்றார்.
பின்பு பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “டெக்னீஷியன்ஸ்தான் படத்தின் பலமே” எனக் கூறியிருந்தார். இதையடுத்து இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “தயாரிப்பாளர் செய்வதை சரியாகச் செய்தாலே திரைத்துறை நன்றாக இருக்கும்” என்றார். பிறகு தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், “செல்வமணி சொன்னதுபோல ஃபெப்சியை உடைக்க முடியாது” என்றார்.
இதையடுத்து இயக்குநர் பேரரசு பேசுகையில், “மையலை பல வகையாகச் சொல்லலாம். ஃபெப்சி தொழிலாளர்கள் நலன் கருதியிருக்கும் அமைப்பு. அதற்கு எதிராக ஒன்று ஆரம்பிக்கும்போது அது உழைப்பாளர்களுக்கு என்று ஆரம்பிப்பதா? இல்லை, ஃபெப்சியை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிப்பது. அது தவறான நோக்கம்” எனக் கூறினார்.