சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாக கடந்துவிட்டது. இதில் நூறு பேருக்கும் மேல் குணமடைந்துள்ளனர். இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் ஆர்.ஜே. விஜய் கரோனா வைரஸ் தொற்றுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “இதுவரை நான் வீட்டிலேயே இருந்ததில்லை. திடீரென்று இத்தனை நாள் வீட்டில் இருக்கும் போது தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. என் அம்மா எப்படி இந்தச் சூழலில் தினமும் இருக்கிறார். அவரை நான் இதுவரை பெரிதாக எங்கும் அழைத்து போனதில்லை. அவருடைய வலி இப்போது தான் எனக்குப் புரிந்தது. கரோனாவுக்கு ரொம்ப நன்றி" என்று கூறியுள்ளார்.