ஜியோ சாவன் இணையதளம் இந்தியாவில் இணைய ஆடியோ நிகழ்ச்சி சேவையை கடந்த 2016 ஏப்ரல் முதல் வழங்கி வருகிறது. கதைசொல்லிககள், சுயாதீன தாயாரிப்பாளர்கள், தன்முனைப்பு கலைஞர்களுடன் இணைந்து இந்த சேவையை வழங்கி வருகிறது. காமெடி முதல் பாப் கலாச்சாரம் வரை, விளையாட்டு, அரசியல், சினிமா என பலவகையிலான 100க்குமேற்பட்ட நிகழ்ச்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு அளித்து, பலமான நிறுவனமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் முன்னனி நிறுவனமாக வளர்ந்து வரும் ஜியோ சாவன் இணையதளம் தமிழ் ரசிகர்களுக்கு பிரத்யேகமாக ஆர்.ஜெ.பாலாஜி தொகுத்து வழங்கும் 'மைண்ட் வாய்ஸ்' எனும் நிகழச்சியை தொடங்கியுள்ளது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் ஜியோ சாவன் நிறுவன உலக சந்தையின் விநியோக துணை அதிகாரி ஆதித்யா காஷ்யப் பேசியபோது... ''முதலில் பாட்காஸ்ட் என்றால் என்னவென்று சொல்லிடுறேன். இது இணையத்தில் இருக்கும் ஆடியோ ஷோ எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். இந்த நிகழ்ச்சி புதுமையானதாக இருக்கும். எங்க தரப்பில் இருந்து யோசித்த போது இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆர்.ஜெ.பாலாஜியை தவிர வேறு யாரும் சரியாக இருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்தோம். எந்த சமூக விஷயத்துக்கும் முன்னுக்கு வந்து நிற்பவர் அவர் . அவருடன் இணைந்து இந்த நிகழ்ச்சி செய்வதில் மகிழ்ச்சி. தமிழ் மொழியில் ரசிகர்களை ஈர்ப்பதில் இந்த நிகழ்ச்சி பெரிதளவில் உதவும்'' என்றார்.
மேலும் இதில் ஆர்.ஜெ.பாலாஜி பேசியபோது... ''முதலில் பாட்காஸ்ட் என்றால் என்னவென்றே எனக்கு புரியவில்லை. பிறகு தான் அதைப்பற்றி தெரிந்தது. இது ஒரு ரேடியோ ஷோ இணையத்தில் இருக்கும் ரேடியோ. நான் ஏன் இதில் இருக்கிறேனென்றால், இது இப்போது முடிவு பண்ணியதில்லை. வெகுகாலம் முன்பே முடிவு செய்தது. ஜியோ சாவன் உலகம் முழுவதும் இயங்குற நிறுவனம். இதுவரை 100க்கும் மேற்பட்ட ஐடியாக்களை பிடித்து கடைசியில் இந்த நிகழ்ச்சியை செய்யலாமென முடிவு செய்தோம். இந்த நிகழ்ச்சி இன்றைய சூழ்நிலையில் அவசியம் என தோன்றுகிறது. இன்றைய இளைஞர்கள் எல்லா விஷயங்கள் மீதும் கோபப்படுவதை கடமையாக வைத்திருக்கின்றனர். கோபப்படுவது மட்டுமே சமூகத்துக்கு செய்கின்ற முக்கிய மாற்றமாக எல்லோரும் நினைக்கின்ற காலமாக இது இருக்கின்றது. இது மாற வேண்டும். முக்கியமான விஷயங்களை மறைத்து, தேவையில்லாத விஷயங்களை செய்திகள் முன்னிலைப்படுத்தி நம்மை பதட்டப்படுத்தியே வைத்திருக்கிறார்கள். இதை மாற்றக்கூடிய நிகழ்ச்சியாக, பேச மறுக்கின்ற, மறக்கக்கூடிய விசயங்களை பேசுகின்ற நிகழ்ச்சியாக இது இருக்கும். இதில் சமூகத்தின் காரசார விஷயங்கள் மட்டுமில்லாமல் விளையாட்டு, சினிமா என எல்லாவற்றையும் பற்றி பேசுகின்ற நிகழ்ச்சியாக இருக்கும். இது எனக்கு புதியதாக இருக்கின்ற, அதே நேரம் சமூகத்துக்கு சொல்ல வேண்டிய கடமையாவும் இந்த நிகழ்ச்சி இருக்கும்'' என்றார்.