ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய கன்னடப் படம் 'காந்தாரா'. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்டது.
இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘காந்தாரா ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. காந்தாரா படத்தின் ப்ரீக்குவலாக, அதாவது படத்தின் முன் கதையை மையப்படுத்தி உருவாகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் போஸ்டர் முன்னதாக வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடந்த நிலையில் தொடர் விபத்துகளை சந்தித்து ஒரு வழியாக கடந்த ஜூலையில் நிறைவுற்றது. இதில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவயா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் ட்ரெய்லரை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் புராணக் கதைகள், காட்டுக்குள் இருக்கும் மர்மம், அதிகார வர்கத்தால் மக்கள் படும் பாடு, அடக்குமுறை... இதனிடையே அதிகார வர்கத்தில் இருக்கும் ருக்மிணிக்கும் பழங்குடியின மக்களாக வரும் ரிஷப் ஷெட்டிக்கும் ஏற்படும் காதல் என பல்வேறு விஷயங்கள் காட்டப்படுகிறது. மேலும் அதிகார வர்க்கம் நடத்தும் அடக்குமுறைகளை எதிர்த்து போராடும் மக்கள், இறுதியில் வென்றார்களா இல்லையா என்பதை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. விஷுவலாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.