காந்தாரா பட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘காந்தாரா ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகிறது. இப்படத்தின் கதை முதல் பாகத்தின் ப்ரீக்குவலாக உருவாகிறது. இப்படத்தில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவயா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பிரம்மாண்டமான விஷுவல்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படம் கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்து நல்ல ஓபனிங்கை வட இந்தியா முழுவதும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே படக்குழு புரொமோஷன் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை பெங்களுர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இதில் ஹைதரபத்தில் நடந்த நிகழ்வில் அம்மாநிலத்தின் மொழியான தெலுங்கில் பேசாமல் கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி பேசினார். இது தெலுங்கு ரசிகர்களை கோவமடையச் செய்துள்ளது. அவர்கள் ரிஷப் ஷெட்டியை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். மேலும் #boycottkantarachapter1 என்ற ஹேஷ்டேகையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் “நான் எப்போது கன்னட மொழியைத் தான் மனதில் வைத்திருப்பேன். அதே சமயம் எல்லா மொழிகளையும் கற்று கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஏனென்றால், நான் எங்கு சென்றாலும் அந்தந்த மக்களின் மொழியில் பேசுவதை மரியாதைக்குரியதாக நினைக்கிறேன். அதனால் அதை முயற்சி செய்து வருகிறேன். ஆனால் சில நேரங்களில் அது சிரமமாகி விடுகிறது. ஏனென்றால் ஒரு இடத்தில் நீங்கள் ஒரு மொழி பேசினால் அது வேறொரு இடத்தில் பார்க்கும் போது, நான் அந்த மொழியை தவிர வேறு மொழியில் பேசவில்லை என்பது போல ஆகிவிடும்.
நான் பெருமைமிகு கன்னடர். கன்னட மொழியை மிகவும் நேசிக்கிறேன். அதே சமயம், மற்ற மொழிகளையும் கன்னட மொழிக்கு சரிசமமாக மதிக்கிறேன். இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள், வாழ்க்கை முறைகள் மற்றும் நம்பிக்கைகள் இருந்தாலும், அடிப்படை ஒன்றுதான். அதனால் நான் வேறொரு இடத்திற்கு செல்வதும் அங்கு அந்த இடத்தின் மொழியை கற்றுக்கொண்டு பேசுவதும் மகிழ்ச்சியை தருகிறது. அதை நான் தொடர்ந்து செய்ய முயற்சிக்கிறேன். அதே போல் தெரியாத மொழியை கற்றுகொண்டு பேசுவதற்கு பாடுபடுவேன்” என்றார்.