காந்தாரா பட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘காந்தாரா ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகிறது. இப்படத்தின் கதை முதல் பாகத்தின் ப்ரீக்குவலாக உருவாகிறது. இப்படத்தில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவயா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பிரம்மாண்டமான விஷுவல்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Advertisment

இப்படம் கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி படம் பார்க்க வருபவர்கள் மது அருந்தக்கூடாது என்றும் புகைபிடிக்கக்கூடாது என்றும் அசைவ உணவு சாப்பிட்டு வந்து படம் பார்க்க கூடாது என்றும் ஒரு போஸ்டர் சமுக வலைதளங்களில் வைரலானது. மேலும் அதை பின்பற்றினால் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அப்போஸ்டர் சர்ச்சையை கிளப்பியது. 

இந்த போஸ்டர் சர்ச்சை குறித்து தற்போது ரிஷப் ஷெட்டி விளக்கமளித்துள்ளார். பெங்களூருவில் பட ட்ரெய்லர் வெளியீடு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ரிஷப் ஷெட்டி, போஸ்டர் சர்ச்சை குறித்தான கேள்விக்கு, “முதலில் அந்த போஸ்டரை பார்த்ததும் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். உடனே என்னுடைய படக்குழுவிற்கு அனுப்பி யார் இதை செய்கிறார்கள் என்று விசாரிக்க சொன்னேன். அது போலி என தெரிய வந்தது. ஆனால் அதற்கு உடனடியாக சமூக வலைதளங்களில் ரியாக்ட் செய்ய கடினமாக இருந்தது. இருப்பினும் சம்பந்தட்டவர்கள் போஸ்டரை டெலிட் செய்து விட்டு மன்னிப்பு கேட்டார்கள்.

ஒருவரின் உணவு பழக்கமும் தனிப்பட்ட பழக்கமும் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதை கேள்வி கேட்கும் உரிமை  யாருக்கும் இல்லை. ஒரு படம் பிரபலமாக இருக்கும் போது அதை வைத்து சிலர் புகழ் தேட முயற்சிக்கிறார்கள். அதில் கவனம் செலுத்த நாங்கள் விரும்பவில்லை. அதே சமயம் பலரும் அது போலியான போஸ்டர் என்று கூறிவந்ததையும் நாங்கள் பார்த்தோம். அப்போஸ்டருக்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார். 

Advertisment