பாலிவுட்டில் 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்', 'ஃபுக்ரே', 'கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சத்தா. இவர் தனது சமூக வலைதள பக்கத்தில், ஒரு பதிவிற்கு ரிப்ளை செய்திருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதாவது, பிராந்திய ராணுவ கமாண்டர் கூறியதாக ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானிடமிருந்து முழுமையாகத் திரும்பப் பெற நாங்கள் தயாராக உள்ளோம். அரசின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம். இந்த ஆபரேஷனை விரைந்து முடிப்போம். போர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு எங்களது பதில் வேறு மாதிரி இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவிற்கு நடிகை ரிச்சா சத்தா, "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என கமெண்ட் செய்திருந்தார். இந்த கமெண்டை பார்த்த ரசிகர்கள் அவர் ராணுவத்தையும் 2020ல் சீனப் படைகளுடன் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களையும் அவமதித்ததாகக் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து நடிகை ரிச்சா சத்தாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் "இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. அப்படியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்" என மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதனிடையே நடிகர் அக்ஷய் குமார், நடிகை ரிச்சா சதா, "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என கமெண்ட் செய்திருந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "இதைப் பார்க்கையில் மிகுந்த வருத்தமளிக்கிறது. நமது ஆயுதப்படைகளுக்கு அவமானம் விளைவிக்கும் வகையில் எதையும் நாம் செய்யக்கூடாது. அவர்களால் தான் நாம் இங்கு இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் அக்ஷய் குமார் ரிப்ளை செய்த பதிவிற்கு தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ், "உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை அக்ஷய் குமார். உங்களை விட அந்த நடிகை சொன்னது நம் நாட்டுக்குப் பொருத்தமாக இருந்தது" என அக்ஷய் குமாரை விமர்சித்துள்ளார்.