Skip to main content

இந்திய ராணுவம் குறித்து இந்தி நடிகை போட்ட கமெண்ட் - வருத்தத்தில் அக்சய் குமார்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Richa Chadha comment about indian army akshay kumar reacts

 

பாலிவுட்டில் 'கேங்ஸ் ஆஃப் வசிப்பூர்', 'ஃபுக்ரே', 'கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சதா. சமீபத்தில் பிராந்திய ராணுவ கமாண்டர் கூறியதை ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானிடமிருந்து முழுமையாகத் திரும்பப் பெற நாங்கள் தயாராக உள்ளோம். அரசின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம். இந்த ஆபரேஷனை விரைந்து முடிப்போம். போர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு எங்களது பதில் வேறு மாதிரி இருக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

  

இந்தப் பதிவிற்கு நடிகை ரிச்சா சதா, "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என கமெண்ட் செய்திருந்தார். இந்த கமெண்டை பார்த்த ரசிகர்கள் அவர் ராணுவத்தையும் 2020ல் சீனப் படைகளுடன் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களையும் அவமதித்ததாகக் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து நடிகை ரிச்சா சதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் "இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. அப்படியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களும் ராணுவத்தில் இருந்தவர்கள். ராணுவம் எனது ரத்தத்திலே உள்ளது.

 

சர்ச்சைக்கு உள்ளான 3 வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு நெருக்கமானவர்கள் கூட  இந்திய-சீனப் போரில் பங்கேற்றனர். ராணுவம் எனது ரத்தத்தில் இருக்கிறது. இந்த தேசத்தைக் காப்பாற்றும்போது அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பால் அவர்களது குடும்பத்தினர் எப்படி உணருவார்கள் என்பதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். இது எனக்கு ஒரு உணர்ச்சிப் பிரச்சினை." எனக் குறிப்பிட்டு மன்னிப்பு கோரினார். 

 

இதையடுத்து நடிகர் அக்ஷய் குமார் இது தொடர்பாக தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பது, "இதைப் பார்க்கையில் மிகுந்த வருத்தமளிக்கிறது. நமது ஆயுதப் படைகளுக்கு அவமானம் விளைவிக்கும் வகையில் எதையும் நாம் செய்யக்கூடாது. அவர்களால் தான் நாம் இங்கு இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அக்‌ஷய் குமார் - டைகர் ஷெராஃப்பின் 'படே மியன் சோட்டே மியன்' 

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Akshay, Tiger, Prithviraj starring Bade Miyan Chote Miyan upd

பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'படே மியன் சோட்டே மியன்'. இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், சோனாக்ஷி சின்கா மற்றும் மனுஷி சில்லர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் மிஷ்ரா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் படே மியன் சோட்டே மியன் இடையிலான தோழமை மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது.

இப்படம் குறித்து அக்ஷய் குமார் கூறுகையில், "ஆக்ஷன், காமெடி கலந்த கதையில் உண்மையான சண்டைகள் இப்படத்தை என் மனதுக்கு நெருக்கமான உணர்வை கொடுக்கிறது. இப்படத்தில் நான் முன்பைவிட அதிக திறமையை வெளிப்படுத்த முயற்சித்து இருக்கிறேன். அருமையான படக்குழு உடன் இணைந்து உண்மையான சண்டைக் காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன். இப்படத்தில் பணியாற்றியதை சிறப்பாக கருதுகிறோம். இதேபோன்று இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும்." என்றார்.

Next Story

இந்தியாவிற்கு பதில் ‘பாரதம்’ - ஒரு அடி மேலே பாய்ந்த அக்ஷய் குமார்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

india bharat issue akshay kumar changed his movie title

 

பாலிவுட்டில் அக்ஷய் குமார் தற்போது சுரேஷ் தேசாய் இயக்கத்தில் பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. 1989 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் ராணிகஞ்ச் நிலக்கரி வயல் இடிந்து விழுந்ததில் 64 சுரங்கத் தொழிலாளர்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் சிக்கிக் கொண்டனர். அவர்களை சுரங்கப் பொறியாளர் ஜஸ்வந்த் சிங் தனது உயிரைப் பணயம் வைத்து சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றியிருந்தார். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. 

 

இப்படத்திற்கு முதலில் 'காப்ஸ்யூல் கில்' (Capsule Gill) என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்பு 'தி கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ' (The Great Indian Rescue) என மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தலைப்பு மாற்றப்பட்டள்ளது. 'மிஷன் ராணிகஞ்ச்; தி கிரேட் பாரத் ரெஸ்க்யூ' என வைக்கப்பட்டுள்ளது. இதனை அக்ஷய் குமார் அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து படத்தின் டீசர் நாளை (07.09.2023) வெளியாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் 6 அன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என பகிர்ந்துள்ளார். 

 

கடந்த சில நாட்களாக, பாஜக அரசு வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும் இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தியா என்ற சொல்லிற்குப் பதில் பாரதம் என்று அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாக  மத்திய அமைச்சர் அனுராக் “இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். பாரத் என்ற பெயர் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் எதிர்ப்பு மனநிலை தற்போது வெளிப்பட்டுள்ளது.இதற்கு முன்பு பாரத் சர்க்கார் என்று அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே" என முற்றுப்புள்ளி வைத்தார். இந்த சூழலில் சமூக வலைத்தளங்களில் திரை பிரபலங்கள் அமிதாப்பச்சன், கங்கனா ரணாவத் பாரதம் என்பதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அவர்களை விட ஒரு படி மேலே போய் அக்ஷய் குமார் தனது படத்தின் தலைப்பில் இந்தியா என்ற சொல்லிற்கு பதில் பாரதம் என மாற்றியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் திரைப்படங்கள் மற்றும் பிரமுகர்கள் குறித்து பாஜக தலைவர்கள் தேவையற்ற கருத்துகளை கூற வேண்டாம் என பிரதமர் மோடி அவரது கட்சி நிர்வாகிகளை எச்சரித்திருந்ததாக கூறப்பட்டது. அவரது கருத்தை அக்ஷய் குமார் ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.