
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 1ஆம் தேதி வெளியான படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருந்த இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் இதுவரை ரூ.235 கோடிக்கும் மேலாக வசூலித்தது. 25 நாட்களை கடந்து தற்போது ஓடி வருகிறது. படத்தின் லாபத்தில் சூர்யா தனது அகரம் அறக்கட்டளைக்கு ரூ.10 கோடி வழங்கினார். இதனிடையே படக்குழு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியது. பின்பு நன்றி தெரிவிக்கும் விழா நடத்தியது. இதில் படத்தின் தமிழக வெளியீட்டு விநியோகஸ்தர் சக்தி வேலன் சூர்யாவிற்கு வைர மோதிரம் பரிசளித்தார். ஆனால் சூர்யா திருப்பி அந்த மோதிரத்தை சக்தி வேலனுக்கே கொடுத்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டுத் தேதி வெளியானது. அதன்படி நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வரும் 31ஆம் தேதி அன்று தமிழ், இந்தி உள்ளிட்ட மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு நாள் முன்பே 30ஆம் தேதி இப்படம் வெளியாகுவதாக நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.